வில் போல புருவம் அசைத்து ரசிகர்களை இழுத்தவர் பிரியா வாரியர். அந்த புருவ வில்லால் உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமானார் அவர். ’ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில்தான் இப்படியொரு புருவ அசைவை நிகழ்த்தியிருந்தார் பிரியா.
(பிரியா வாரியர்)
இந்த புருவை அசைவை வைத்து குஜராத்தில், ’கண் அசைவில் விபத்துகள் நேரிடலாம், கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்’ என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதற்கும் நல்ல வரவேற்பு. குஜராத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஓமர் லுலு இயக்கியுள்ள இந்த ’ஒரு அடார் லவ்’ படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இதில் ரோஷன் அப்துல் ரஹூப், அஷிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரியா வாரியருடன் இன்னொரு ஹீரோயினாக நடித்திருப்பவர், மிசெல் அன். இவரது அம்மா அன்னி லிபுவும் இதில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மிசெல் அன் -னின் அம்மாவும் உறவினர்களும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் மனரீதியாக கொடுமைப் படுத்து வதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கொன்று விடுவார்கள் என்று பயந்து மிசெல் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இது தொடர்பாக, மிட்செல் கையெழுத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள திரிபுனிதுரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகாரும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் அதை மறுத்துள்ளார் மிசெல். தன் அம்மாவும் உறவினர்களும் தன்னைத் தாக்கவில்லை என்றும் பாலியல் தொல்லை ஏதும் இல்லை என்றும் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் மிசெல் கூறியுள்ளார். அவர் அம்மா, அன்னி லியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘இந்த பொய் செய்தியால் நாங்கள் பாதிப்படைந்துள்ளோம். இதுதொடர்பாக வழக்கு தொடுக்கலாம் என இருக்கிறோம். ’ஒரு அடார் லவ்’ படத்துக்கு எதிராக இப்படியொரு செய்தி கிளப்பப்படுகிறது என நினைக்கிறோம். அந்தப் படத்துக்கு இது எதிர்மறை விளம்பரத்தைத் தேடி கொடுத்துவிடும். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.