“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர்
கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக நான் கேள்வி பட்டதே இல்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து, உணவை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக நான் கேள்வி பட்டதே இல்லை. நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் பிரசாதத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில்களின் பணியாளர்கள், மேலாண்மை அதிகாரிகள் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவர்களிடம் சிறந்த சிகிச்சையை அளிக்குமாறு கூறியுள்ளேன். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளேன். அதற்கான செலவை அரசு ஏற்கும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.