“நமோ டிவி செய்தி சேனல் இல்லை” - டாடா ஸ்கை விளக்கம்
நமோ டிவி செய்தி சேனல் என்று தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது உண்மையல்ல என டாடா ஸ்கை தலைவர் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த மாதம் 31ம் தேதி ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் இந்த டிவிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது, மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதி அளித்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து நமோ டிவி இந்தியாவின் முக்கிய டிடிஎச் சேவைகளில் ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நமோ டிவி ஒரு செய்தி சேனல் என்று டாடா ஸ்கை டிடிஎச் சார்பில் ஒரு ட்விட் பதிவு செய்யப்பட்டது. இந்த தகவல் பரவியது சர்ச்சை கிளம்பியது. மத்திய அரசின் அனுமதியின்றி எப்படி அனைத்து டிடிஎச்-களிலும் ஒரு செய்தி சேனலை ஒளிபரப்ப முடியும் என கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில் டாடா ஸ்கை சிஇஓ ஹரித் நாக்பால் அளித்துள்ள விளக்கத்தில், “நமோ டிவி ஒரு செய்தி சேனால் இல்லை. டாடா ஸ்கையில் பணிபுரியும் ஒருவர் அப்படி ட்வீட் செய்துவிட்டார். அது தவறானது. அதனை பாஜக இணையதள சேவை வழியாக செய்கிறது. அதற்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நமோ டிவி ஒரு வழக்கமான சேனல் இல்லை என்றும், அது விளம்பர வகையை சேர்ந்தது என்பதால், அதற்கு அனுமதி வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.