‘நான் யாரையும் ஏமாற்றவில்லை, நான் ஒரு தோல்வி அடைந்த தொழிலதிபர்’ என்று வி.ஜி.சித்தார்த்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் ‘கஃபே காபி டே’ உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். ‘கஃபே காபி டே’யின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்நிலையில் அவர் நேற்று இரவு மங்களூரிலுள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் நேற்று ‘கஃபே காபி டே’ நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தக் கடித்தத்தில் சித்தார்த்தா,“என்னுடைய 37 வருட கடின உழைப்பிற்கு பின்பும் என்னால் லாபகரமான தொழில் முறையை கையாள முடியவில்லை. ஏனென்றால் நான் முதலில் நேரடியாக 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளையும் கூடுதலாக 20ஆயிரம் வேலைவாய்புகளையும் என்னுடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் உருவாக்கினேன். அப்போதும் என்னால் லாபகரமான தொழிலுக்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே உங்கள் அனைவரையும் கைவிட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
பங்குகள் தொடர்பான விவகாரத்தால் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. இதனையடுத்து அந்தப் பரிவர்த்தனையை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி எனக்கு நிறையவே நெருக்கடி ஏற்பட்டது. காபிடே பங்குகள் குறித்து மீண்டும் அறிக்கையை வருமானவரி துறையிடம் தாக்கல் செய்தாலும் அவர்கள் அதை ஏற்கவில்லை. எனவே எனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
ஆகவே இந்தத் தவறுகள் மற்றும் நஷ்டம் ஆகிய அனைத்திற்கும் நான் மட்டுமே காரணம் என்னுடைய நிர்வாகத்திலுள்ள மற்ற யாருக்கும் இதில் பங்கில்லை. அதேபோல எனது குடும்பத்திற்கும் இது தெரியாது. இதனால் இது தொடர்பான அனைத்து சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் என் மீதே எடுக்கவேண்டும். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர். வருங்காலத்தில் ஒருநாள் என்னுடைய நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டு என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.
மேலும் இந்தக் கடித்தத்துடன் நமக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரத்தையும் அளித்துள்ளேன். நமது சொத்துகளைவிட கடன்கள் குறைவாக உள்ளதால் அதனை எளிதில் திருப்பி தரமுடியும்” என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.