"என்னை மகாராஷ்டிரா முதல்வராக்குங்கள்"- விவசாயி கடிதம்
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணியில் இழுபறி நீடித்துவரும் நிலையில், பிரச்னை தீரும்வரை தம்மை முதல்வராக நியமிக்குமாறு அம்மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அங்கு ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் பாரதிய ஜனதா -சிவசேனா கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு கட்சிகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு முடிவுக்கு வந்து, புதிய அரசு அமையும்வரை தன்னை முதலமைச்சராக நியமிக்கக்கோரி, பீட் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் விஷ்ணு என்ற விவசாயி அம்மாவட்ட ஆட்சியரிடம் விருப்ப கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், தாம் மாநில முதல்வராக இருக்க விரும்புவதாகவும், பருவ மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பேரழிவை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நிலை குறித்து கவலைப்படாமல், பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் முதலமைச்சர் பதவிக்கு போட்டிப் போட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அவர், இருகட்சிகளிடையேயான பிரச்னை தீரும்வரை முதல்வர் பதவியை ஆளுநர் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தான் விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்து அவர்களுக்கு நீதி வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.