நீதிபதி லோயா மரணம் இயற்கையானது - உச்சநீதிமன்றம்
நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி தான் லோயா. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி அன்று திருமண நிகழ்ச்சியில் ஒன்றில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரின் மரணத்தில் பலரும் சந்தேகம் இருப்பதாக கூறினர். அத்துடன் லோயாவின் மரணம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுக்கள் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்திருந்தது. இந்நிலையில் லோயா வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு கோரிய மனுக்களுக்கு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், லோயா வழக்கிற்கு சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் லோயாவின் வழக்கு இயற்கையானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.