“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்
கர்நாடக அரசை காப்பாற்ற காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இருமுறை கெடு விதித்தும், அதை ஆளும் மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்துவிட்டது. இதனால், அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
சட்டமன்ற விவாதத்தின் போது ஆளுங்கட்சியினர், திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள டி.கே.சிவக்குமார், “கர்நாடக அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒருவரை முதலமைச்சராக்க மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக இருக்கிறது. சித்தராமையா, பரமேஸ்வரா அல்லது டி.கே.சிவக்குமார் இந்த மூவருள் ஒருவரை முதல்வராக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் மஜத தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.