’குறிப்பிட்ட நேரம் தான் வீட்டுப்பாடம்..அதிக எடையுள்ள பைகளை சுமக்க கூடாது’- ம.பி கல்வி துறை

’குறிப்பிட்ட நேரம் தான் வீட்டுப்பாடம்..அதிக எடையுள்ள பைகளை சுமக்க கூடாது’- ம.பி கல்வி துறை
’குறிப்பிட்ட நேரம் தான் வீட்டுப்பாடம்..அதிக எடையுள்ள பைகளை சுமக்க கூடாது’- ம.பி கல்வி துறை

மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு நிர்ணயித்துள்ள எடையுள்ள பள்ளிப் பைகளை மட்டும் தான் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்யவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அறிவித்துள்ள அறிவிப்பில், 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பைகளின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரை இருக்க வேண்டும். அதேபோல், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 1.7 முதல் 2.5 கிலோவும், 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புக்கு 2 முதல் 3 கிலோவும், 8ம் வகுப்புக்கு 2.5 முதல் 4 கிலோவும், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கு 2.5 முதல் 4.5 கிலோவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாரத்திற்கு ஒரு முறையாவது பைகள் இல்லாமல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்பதையும், பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிப் பைகளின் எடையைக் கண்காணிக்கும் பொறுப்பு மாவட்டக் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில மற்றும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) நிர்ணயித்த பாடப்புத்தகங்களை விட அதிகமான புத்தகங்களை மாணவர்கள் வைத்திருக்கக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லாமல் இருப்பது தொடங்கி பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கான வீட்டுப்பாடம் குறித்த அறிவுருத்தல்கள் இடம்பெற்றுள்ளன. மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேர வீட்டுப்பாடம் தான் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் ”அறிவிப்பு பலகை மற்றும் வகுப்பறைகளில் பை எடை அட்டவணையை வைக்க வேண்டும். அதனை பள்ளி நிர்வாகக் குழு தயார் செய்து பள்ளி நாட்குறிப்பும் பை எடையில் சேர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அனைத்து புத்தகங்களையும் தினமும் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

மேலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், பணிப்புத்தகங்கள் மற்றும் பிற முக்கிய பொருட்களை வகுப்பறைகளிலேயே வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றும் கணினி, ஒழுக்கக் கல்வி, பொது அறிவியல், சுகாதாரம், உடற்கல்வி, விளையாட்டு மற்றும் கலை போன்ற பாடங்கள் புத்தகங்கள் இல்லாமல் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிப் பைகள் மாணவர்களின் தோள்களுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com