எனது ராஜ்யசபா ஓட்டுக்கு ரூ.25 கோடி தருவதாக சொன்னார்கள் - புயலை கிளப்பிய ராஜஸ்தான் அமைச்சர்

எனது ராஜ்யசபா ஓட்டுக்கு ரூ.25 கோடி தருவதாக சொன்னார்கள் - புயலை கிளப்பிய ராஜஸ்தான் அமைச்சர்
எனது ராஜ்யசபா ஓட்டுக்கு ரூ.25 கோடி தருவதாக சொன்னார்கள் - புயலை கிளப்பிய ராஜஸ்தான் அமைச்சர்

ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்காக தனக்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா பேசியிருப்பது அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர குடா நேற்று ஜுன்ஜுனுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, “ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்காக எனக்கு ரூ.25 கோடி தருவதாக சொன்னார்கள். பின்னர் நான் என் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவள் காசு முக்கியமில்லை, நல்ல மனம்தான் முக்கியம் என்று கூறினார். நான் அந்த வாய்ப்பை நிராகரித்தேன்” என்று கூறினார் ராஜேந்திர குடா.

மேலும் 2020-ம் ஆண்டு முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் நடத்திய கிளர்ச்சியின்போது நடந்த மேலும் ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். “2020ல் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான கிளர்ச்சியின் போது தனக்கு ரூ.60 கோடி வழங்குவதாக தெரிவித்தனர். நான் என் குடும்பத்தாரிடம் பேசினேன். என் மனைவி, மகன் மற்றும் மகள் அனைவரும் பணத்தை தாங்கள் விரும்பவில்லை என்று சொன்னார்கள். உங்களுடன் இருப்பவர்கள் அப்படி நினைக்கும்போது எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறினார் ராஜேந்திர குடா.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது எந்த தலைவரையோ அல்லது கட்சியையோ ராஜேந்திர குடா குறிப்பிடவில்லை. எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்குவதன் மூலம் பாஜக தனது அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக முதல்வர் அசோக் கெலாட் பலமுறை குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ராஜேந்திர குடா?

2018 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று 2019 இல் காங்கிரஸில் இணைந்த ஆறு எம்எல்ஏக்களில் ராஜேந்திர குடாவும் ஒருவர். ஜூலை 2020 இல் சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது ராஜேந்திர குடா முதல்வர் பக்கம் இருந்தார். 2021 நவம்பரில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்கான துறை அமைச்சராக ராஜேந்திர குடா நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com