குஜராத்தின் மோர்பி தொகுதி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதா தொங்குபாலம் விபத்து?
பாலம் இடிந்துவிழுந்து பெரும் விபத்து ஏற்பட்ட மோர்பி தொகுதியில் அரசியல் மாற்றம் நிகழலாம் என நாடளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு பாஜகவே முன்னிலை வகித்துவருகிறது.
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு வெறும் 14 நாட்களே இருந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதொ ‘மோர்பி தொங்குபாலம்’ அறுந்து விழுந்து பெரும்விபத்து ஏற்பட்டது. அதில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து மாநில அரசின்மீது பல்வேறு கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. இதுகுறித்து அரசுமீது அதிருப்தி விமர்சனங்களும் எழுந்த நிலையில், இச்சம்பவம் அம்மாநில தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பேசப்பட்டது.
இன்று குஜராத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மோர்பி தொகுதிமீது கவனம் திரும்பியுள்ளது. இந்த முறை மோர்பி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி படேலும், பாஜக சார்பில் 5 முறை எம்.எல்.ஏ வாக பதவிவகித்த காந்திபாய் அம்ருதியாவும் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி சார்பில் பன்கஜ் ரன்சாரியா களமிறக்கப்பட்டார். மோர்பியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மோர்பி, தங்கரா மற்றும் வான்கனேர் ஆகிய பகுதிகளும் அடங்கும். பால விபத்து மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்த்த நிலையில், அங்கு பாஜகவே முன்னிலை வகிக்கிறது.