பீர் பாட்டிலுடன் படையெடுக்கும் பெண்கள்: ட்ரெண்டாகும் #GirlsWhoDrinkBeer
பெண்கள் பீர் குடிக்கத் தொடங்கியிருப்பது பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு எல்லை கடந்துள்ளதாக கோவா முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ட்விட்டரில், பல பெண்களும் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், பெண்கள் பீர் குடிக்கத் தொடங்கியுள்ளது கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர், “பெண்களும் பீர் குடிக்க தொடங்கியுள்ளதை கண்டு தற்போது நான் அச்சப்பட தொடங்கியுள்ளேன். பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு எல்லை கடந்துள்ளது. தங்களது பிள்ளைகள் போதைப் பொருள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். எல்லா பெண்களை பற்றியும் நான் சொல்லவில்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் பல பெண்கள் தாங்கள் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் சில பெண்களோ தங்கள் தந்தையுடன் இருந்து பீர் குடிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இதனால் #GirlsWhoDrinkBeer என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ஏன் பீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள பெண் ஒருவர், சீயர்ஸ் லேடிஸ் எனக் கூறியவாறு தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மற்றொரு பெண்ணோ, இந்த பீர் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை தான் எவ்வளவு சலித்துபோனதாக அமைந்திருக்கும் என கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணோ, ஒரு க்ளாஸ் பீருக்காக நாங்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையா மேற்கொள்ள முடியும்..? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுபோன்று பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் பிரதமர் மோடிக்கு எதிரான பக்கோடா போராட்டம் சமூக வலைத்தளங்ளில் ட்ரெண்டான நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த மனோகர் பாரிக்கருக்கு எதிரான #GirlsWhoDrinkBeer என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.