“என்னைத் தொடாதீர்கள்.. நான் இப்போது ஒரு பிரபலம்”- திடீர் வைரலான ரானு மோண்டல்..!
சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான ரானு மோண்டலிடம், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரை ரானு மோண்டல் தள்ளி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி படப் பாடல் ஒன்றை ரானு மோண்டல் என்பவர் ரயில்வே நடைமேடையிலிருந்து பாடினார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இவர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இவர் பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவருக்கு மூன்று பாடல்களையும் பாடினார். இதனால் இவர் பெரியளவில் வைரலான நபராக சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.
இந்நிலையில் மும்பையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றுக்கு ரானு மோண்டல் சென்றுள்ளார். அப்போது இவரின் பெண் ரசிகர் ஒருவர், இவருடன் செல்ஃபி எடுப்பதற்காக முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில் ரானு மொண்டல் திரும்பியிருந்ததால் அவரிடம் செல்ஃபி எடுக்க வருமாறு கையை தொட்டு அழைத்துள்ளார். இதானல் மிகவும் கோபம் அடைந்த ரானு, “என்ன செய்கிறீர்கள். என்னைத் தொடாதீர்கள். நான் தற்போது ஒரு பிரபலம். நீங்கள் என்னிடம் வந்து என்ன செய்கிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.
ரானு மோண்டலின் இந்தச் செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ளது. இதற்கு பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் பிரபலமானவர் தற்போது அதே சமூக வலைதளத்தில் எதிர்ப்பை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

