காஷ்மீரில் நடப்பது கீழ்த்தரமான போர்: ராணுவத் தளபதி சர்ச்சை பேச்சு!
காஷ்மீரில் நடப்பது மறைமுகமான போர் மட்டுமல்ல அது ஒரு கீழ்த்தரமான போர். மக்களே ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள். இந்த கீழ்த்தரமான போரை புதுமையான வழிகளில் எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராவத், “காஷ்மீரில் ராணுவ வீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவது என் கடமை. ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களை எதிர்கொள்ள கலவரக்காரர் ஒருவரை ஜீப்பின் முன்புறம் கட்டி, மனிதக்கேடயமாக பயன்படுத்திய மேஜர் லாதூர் கோகாய்க்கு விருது வழங்கினேன். காஷ்மீரில் நடப்பது மறைமுகமான போர். மறைமுகமான போர் என்பது கீழ்த்தரமான போர். அதை புதுமையான வழிகளில்தான் கையாள வேண்டும்” என்றார்.
மேலும், “கலவரக்காரர்கள் எங்கள் மீது கல் எறிகிறார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசுகிறார்கள். என்ன செய்வது என்று ராணுவ வீரர்கள் கேட்கும்போது, பொறுமையாக இருந்து மடியுங்கள். தேசியக்கொடியை போர்த்தி அழகிய சவப்பெட்டியில் உங்கள் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லட்டுமா?, தளபதி என்ற முறையில் வீரர்களின் உறுதியை நான் உறுதிப்படுத்த வேண்டும். உலகில் எந்த நாட்டிலும் ராணுவத்தின் மீது மக்களுக்கு பயம் இல்லையென்றால் அந்த நாடு அழிந்துவிடும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்” என்றார்.