
காஷ்மீருக்கு 370 சட்டத்தின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கியதால் நேரு ஒரு குற்றவாளி என பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக துணைத்தலைவருமான சிவ்ராஜ் சிங் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 370-வது பிரிவு சட்டத்தை அறிமுகப்படுத்தியது குற்றம் என்றார். அது ஷேக் அப்துல்லா குடும்பத்தின் தீவிரவாதம் வளர வழிவகுத்ததாகவும் கூறினார். காஷ்மீர் மக்கள் இன்னும் ஏழ்மையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச போபாலில் பாஜக எம்பி பிரக்யா தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிவராஜ் சிங்கின் கருத்தை குறிப்பிட்ட செய்தியாளர்கள், 370-வது சட்டப்பிரிவை அமல் செய்ததால் நேரு குற்றம் செய்தவர் என்பதை எப்படி பார்க்கின்றீர்கள் என பிரக்யாவிடம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த பிரக்யா, தாய்நாட்டை நோகடிக்கும் யாரும் குற்றவாளிதான். இந்தியாவை பிளக்க நினைக்கும் யாரும், கண்டிப்பாக குற்றவாளிதான் என்று நேருவை குறிப்பிட்டு கூறினார். அத்துடன், “370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு யாரெல்லாம் மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவர்கள் எல்லாம் நாட்டை நினைத்து பெருமை அடைவார்கள். மோடி மற்றும் அமித் ஷாவை நினைத்து பெருமைப்படுபவர்கள் தேசப்பற்று உடையவர்கள். சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” என்று தெரிவித்தார்.