“நாங்கள் பழமைவாதிகள்தான், ஓரினச் சேர்க்கையை ஏற்கமுடியாது” ராணுவத் தளபதி பிபின்

“நாங்கள் பழமைவாதிகள்தான், ஓரினச் சேர்க்கையை ஏற்கமுடியாது” ராணுவத் தளபதி பிபின்

“நாங்கள் பழமைவாதிகள்தான், ஓரினச் சேர்க்கையை ஏற்கமுடியாது” ராணுவத் தளபதி பிபின்
Published on

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் அது ராணுவத்தில் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு முதன் முதலில் 1860 ஆம் ஆண்டு, மெக்காலே பிரபுவினால் கொண்டுவரப்பட்டது. அக்காலத்திய கலாசாரத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது பிரிட்டனில் தன்பாலின சேர்க்கை குற்றம் என்றும் அதற்கு பத்து ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டங்களில் இருந்து நீக்கப்படவில்லை.

377ஆவது பிரிவை விலக்கிக் கொள்ள 2001 ஆம் ஆண்டு நாஸ் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் தன்பாலின சேர்க்கை குற்றச்செயல் அல்ல தீர்ப்பளித்தாலும், பின்னர் உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு அந்த தீர்ப்பை ரத்து செய்தது. இந்த தீர்ப்பு மீது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் தீர்ப்பு வழங்கியது. அதில் தன்பாலின உறவு குற்றமல்ல என தெரிவித்துள்ளது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஓரினச்சேர்க்கை சமூகத்தினருக்கும் உள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்புமாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், ராணுவத் தளபதியின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராவத், ஓரினச் சேர்க்கை போன்றவை ராணுவத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அம்சங்கள் எனத் தெரிவித்தார். அதே சமயம் ராணுவம் என்பது நிச்சயம் சட்டத்திற்கு மேலான அமைப்பு அல்ல என்றும் ராவத் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு பின் அவர் இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார். 

“நாங்கள் பழமைவாதிகள் தான். நாங்கள் நவீனமயமாக்கப்பட்டவர்களோ அல்லது மேற்கத்தியமயமாக்கப்பட்டவர்களோ இல்லை. ராணுவத்தில் ஓரினச் சேர்க்கை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் ராணுவ வீரர்களுக்கு பொருந்தாது. இது மிகவும் தீவிரமான பிரச்னை” என்று திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com