மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா
மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஒரே கார்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மக்கள் பதிவேடு அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அரசு திட்டங்களின் நன்மைகள் மக்களை சென்றடையவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பான பயிற்சி அல்ல. தேசிய மக்கள் தொகை பதிவு என்பது நாட்டில் உள்ள பல பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவும்.
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும். அதனால், காகித பயன்பாட்டில் இருந்து டிஜிட்டலுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மாறவுள்ளது” என்றார்.