“நீ ஏன் பிரதமராகக்கூடாது?” - ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவரிடம் மோடி கேள்வி
ஜனாதிபதியாவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என்ற மாணவரிடம் ‘நீ ஏன் பிரதமராகக்கூடாது’ என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
சந்திரயான் 2 திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பூடானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு திரண்டிருந்தனர். திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.
எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். மேலும் அங்கிருந்த மாணவர்களிடம் பிரதமர் மொடி கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என மோடியிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த மோடி, நீ ஏன் பிரதமராகக்கூடாது? ஏன் ஜனாதிபதி? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த மாணவர், “நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு டிப்ஸ் கொடுங்கள்” எனக் கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மோடி, “வாழ்க்கையில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக கொள்ளுங்கள். அதை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முனையுங்கள். நீங்கள் தவறவிட்டதை மறந்துவிடுங்கள், ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.