“பேசுவதை நிறுத்திவிட்டு உலகம் செயல்பட வேண்டும்” - பிரதமர் மோடி
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி பங்கேற்று உரை ஆற்றினார்.
இதையடுத்து ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “பேசுவதற்கான நேரம் முடிந்து விட்டது. தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டும். ஏனென்றால் சொல்வதைவிட செயல்படுவதையே நாங்கள் அதிகம் நம்புவோம். எங்கள் நாட்டு மக்களுக்கு சமைப்பதற்கு சுத்தமான எரிவாயு சிலிண்டர்களை வழங்கி உள்ளோம். அத்துடன் தண்ணீர் மற்றும் மழை நீர் சேமிப்பிற்காக ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
அத்துடன் இந்தாண்டு இந்திய சுதந்திர தினத்தன்று ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நாங்கள் ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இது உலகளவில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

