மக்களை அரசு மதரீதியாக பிரித்தாள்கிறது: ராகுல் காந்தி புகார்
மத்திய அரசு நாட்டு மக்களை சாதி, மத ரீதியாக பிரித்தாளுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பஹ்ரைனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அடுத்த 6 மாதங்களில் ஒளிரும் காங்கிரஸ் கட்சியை தரப்போவதாக கூறினார். நாட்டில் வறுமையை நீக்கி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கு பதிலாக வெறுப்பு மற்றும் பிரிவினைவாத சக்திகள் வளர்ச்சி பெறுவதைத்தான் பார்க்கமுடிகிறது என அவர் குற்றம்சாட்டினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், சிறந்த சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் தமது லட்சியம் என கூறினார்.
அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, வேலைவாய்ப்புகள் இல்லாததால் ஏற்பட்டுள்ள கோபத்தை பல்வேறு சமுதாயங்களுக்கிடையிலான வெறுப்பாக மாற்றுவதில் மத்திய அரசு முனைப்பாக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.