“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி
2009ஆம் ஆண்டு முதல் உள்ள கணினி கண்காணிப்பு திட்டத்தை தான் மீண்டும் நடைமுறை படுத்துக்கிறோம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.
கணினி கண்காணிப்பு திட்டம் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஆனந்த் ஷர்மா கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “தேசிய பாதுகாப்பிற்காகவே கணினி தகவல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலமான 2009ஆம் ஆண்டு முதலே இருக்கும் கணினி கண்காணிப்பு திட்டத்தையே, தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்துகிறோம். நீங்கள் இதை மலைபோல் சித்தரிக்கின்றீர்கள். அப்படி ஒன்றும் இல்லை.” என விளக்கமளித்தார்.
முன்னதாகம், நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், அகமது படேல் உள்ளிட்டோர் தங்களுடையை அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர், இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.