"இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுங்கள்" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

"இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுங்கள்" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
"இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுங்கள்" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுமாறு அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சில இந்து அமைப்புகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக வாழ்வதை பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதனை சீர்குலைக்க சமூக விரோதிகள் முயற்சிப்பார்கள் என்றால், நமது முதல்வர் ஏற்கனவே கூறியதை போல அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேலாவது இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவோர் தனது செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என எடியூரப்பா தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் பிரச்னை தொடங்கியது முதலாக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்துக் கோயில்கள் அருகே இஸ்லாமியர்களின் கடைகள் இருக்கக் கூடாது; ஹலால் இறைச்சிகளை விற்கக் கூடாது; இஸ்லாமிய கைவினைஞர்கள் செய்த பொருட்களை வாங்கக் கூடாது; இஸ்லாமியர்கள் ஓட்டும் கார் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பிரசாரங்களில் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கர்நாடகாவில் இருக்கும் பெரு நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லக் கூடும் என வர்த்தக நிபுணர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com