“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்” - புத்தாண்டு வாழ்த்துடன் அறிவித்த பிரகாஷ் ராஜ்
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளேன் என்ற அறிவிப்புடன் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அதிக பொறுப்புகளுடன் ஒரு புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். தொகுதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, பிரகாஷ் ராஜ் பாஜகவுக்கு எதிராக தீவிரப் பரப்புரை மேற்கொண்டார். இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்கள் மற்றும் கிண்டல் வாக்குவதங்கள் அதிகரித்தது. இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் கர்நாடகாவில், பாஜவிற்கு எதிராக ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.