ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும் என விமானப்படை முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அபிநந்தன் ரஃபேலில் சென்றிருந்தால் போரில் நிலைமை வேறாக இருந்திருக்கும். விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரஃபேலுக்கு பதில் மிக்-21ல் அபிநந்தன் பறக்க நேரிட்டது. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.
போஃபர்ஸ் ஒரு நல்ல பீரங்கிதான். ஆனால் தற்போது ரஃபேலை கேள்வி கேட்பதை போலவே போஃபர்ஸும் சர்ச்சையில் சிக்கியது. போஃபர்ஸ்க்கு பிறகு நல்ல பீரங்கிகள் எப்போது வரும்? எஸ் -400 பெறுவது அரசாங்கத்தின் மிகச் சிறந்த ஒப்பந்தம். எஸ்-400 ஏவுகணை அமைப்பு ஒரு ‘கேம் சேஞ்சர்’. பாதுகாப்பு கையகப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார். மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார். இதையடுத்து விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவித்தது.