திரைத்துறையினர் திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கா ? - மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

திரைத்துறையினர் திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கா ? - மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

திரைத்துறையினர் திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கா ? - மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
Published on

நடிகர் நடிகைகளின் திருமணங்களுக்கு செல்ல மோடிக்கு நேரம் இருக்கிறது ஆனால் மறைந்த மடாதிபதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருக்கு நேரமில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஷ்வரா சாடியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமி. இவருக்கு வயது 111. இவர் கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி காலை 11.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்காக கர்நாடகத்தில் அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என துணை முதலமைச்சர் ஜி.பரமேஷ்வரா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 
இவரது சீடர்கள் இவரை ‘நடமாடும் கடவுள்’ என்று அழைத்து வந்தனர். மேலும் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவண்ணருக்கு அடுத்து நவீன பசவண்ணர் என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.

ஸ்ரீ சித்தகங்கா கல்வி அறக்கட்டளை சார்பில் 125 கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்கும் விடுதி என வழங்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி சிவகுமார சுவாமி மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அதில், “சிவகுமார சுவாமி மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களிடம். வறுமை, பசி மற்றும் சமூக அநீதி போன்ற தீமைகளை அகற்றுவதற்காக அவர் தன்னை அர்ப்பணித்தார்.

சிவகுமார சுவாமி சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதில் முன்னணியில் இருந்தார். அவரின் கருணையும் சேவையும் ஆன்மிகமும் கீழ்தட்டு மக்களை பாதுகாத்தது. நான் ஸ்ரீ சிவக்குமார சுவாமியை மடத்தில் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். அங்கு நடைபெறும் பரந்த அளவிலான சமூகசேவை முயற்சிகள் அவரது மறைவிற்கு பிறகும் தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று சிவக்குமார சுவாமியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கெளடா, கர்நாடக முதல்வர் எச்டி. குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இதற்கு கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஷ்வரா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமர் மோடி நடிகர், நடிகையரின் திருமணங்களுக்குப் போகிறார், பிரபலங்களைச் சந்திக்கிறார். ஆனால் நடமாடும் கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச் சடங்குக்கு வர முடியவில்லை. தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்தவர் சிவகுமார சுவாமி. அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை வீணாகிப் போயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com