தினமும் ஒருமுறை கூட டென்ஷன் ஆகாத நபர் நம்மில் யாரேனும் இருக்கிறோமா? அப்படி இருந்தால் அதை அரிது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஹைபர் டென்ஷன் அல்லது உயர் ரத்த அழுத்தம் என்பதை சைலண்ட் கில்லர் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் சில ஆண்டுகளில் இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரும்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களுடைய டயட்டில் கவனம் செலுத்தவேண்டும். எதை சாப்பிடுகிறோம், எதை தவிர்க்கிறோம் என்பது மிகமிக முக்கியம்.
உப்பு அல்லது சோடியம் - உப்பு அல்லது சோடியம் அதிகமுள்ள உணவுகளை பிபி நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. இது ரத்தத்தின் திரவ சமநிலையை பாதிக்கும் என்பதை மறக்கவேண்டாம். தினசரி பயன்படுத்தும் உப்பில் 40% சோடியம் இருப்பதால் கவனமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரட், பீட்சா, சீஸ் மற்றும் வெண்ணெய்யில் அதிக சோடியம் இருப்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஊறுகாய் - நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஊறுகாயில் அதிகளவு உப்பு சேர்க்கப்படும். எனவே இதனை தவிர்த்துவிடலாம்.
சர்க்கரை - சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது இனிப்பு சுவையூட்டிகள் நிறைந்த உணவை பொதுவாகவே அனைவரும் தவிர்த்துவிடுவது சிறந்தது. அதிலும் குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்கலாம். உயர் ரத்த அழுத்தமுள்ள பெண்கள் அதை கட்டுக்குள் வைக்க, சர்க்கரை சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்கலாம் என்கிறது 2019ஆம் ஆண்டு ஆய்வு.
கொழுப்பு நிறைந்த உணவுகள் - தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில் 5 - 6 கலோரிகளுக்கு மேல் கொழுப்பு இருக்கக்கூடாது. பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு அதிகம் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இது இதய நோய்களுக்கு கட்டாயம் வழிவகுக்கும்.
சுவையூட்டிகள் - சிலருக்கு மயோன்னிஸ், கெட்ச்-அப், சில்லி சாஸ் போன்றவை உணவை கட்டாயம் அலங்கரிக்கவேண்டும் என்று ஆசைப்படுவர். அவை குறைவாக இருந்தால் சாப்பிடப் பிடிக்காது. இதுபோன்ற உணவு சுவையூட்டிகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இவற்றில் அதிகளவு சோடியம் இருப்பதால் அவை இதயத்தை பலவீனப்படுத்தும்.