முகத்தை விட பாதங்களை பராமரிப்பதே அதிமுக்கியம் - நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..!

முகத்தை விட பாதங்களை பராமரிப்பதே அதிமுக்கியம் - நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..!
முகத்தை விட பாதங்களை பராமரிப்பதே அதிமுக்கியம் -  நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..!

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த நவீன உலகில் மக்கள் பல வகையான நோய்களுக்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான மக்களை ஆட்கொள்ளும் நோயாகவே நீரிழிவு நோய் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவை மட்டுமே கணக்கில் கொண்டால் சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பாதிக்கப்படுவோர் மருத்துவர்களின் அறிவுரைகளை முறையாக பின்பற்றாததால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீரிழிவு நோயாளிகள் அதிகப்படியான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று ’கால்களில் ஏற்படும் புண்’ அதாவது Diabetic Foot Ulcer.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காலில் புண் ஏற்படுவது சாதாரணம்தானே என பொத்தாம் பொதுவாக கூறிவிடலாம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பது சாதாரணமாக காலில் ஏற்படும் புண்ணுக்கும், நீரிழிவு நோயால் வரும் பாதப் புண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் என்பது மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் என்கிறார் பொதுநல மருத்துவரும், சர்க்கரை நோய் நிபுணருமான ஃபரூக் அப்துல்லா. 

ஏனெனில், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயாளிகளின் கால்களில் ஏற்படும் புண்களால் முதலில் விரல்களையும் பிறகு கால்களையே எடுக்கும் அபாயம் உண்டாகிறது. முற்றிய நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு தனது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சிறுகச் சிறுக நலிந்து குறைந்து முற்றிலும் நின்றுவிடுவதால் அவர்களது பாதங்களில் உள்ள நரம்புகள் வலி / தொடுதல்/ வெப்பம் உணரும் தன்மையை படிப்படியாக இழக்கின்றன.

இப்படியான நிலை Diabetic peripheral neuropathy என அழைக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் உள்ள அந்த நோயாளிக்கு தனது காலில் ஆணியோ, முள்ளோ தைத்தாலும் கூட அவர்களால் உணர முடியாது. அந்த காயம் பல நாட்களுக்கு பிறகு சீழ் படிந்து, துர்நாற்றம் வீசிய பிறகே மருத்துவர்களை நாடுவார்கள்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயாளிகள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

”1. தினமும் உறங்கச் செல்லும் முன் கால்களை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

2. நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து உங்கள் கால்களை முக்கியமாக பாதங்களை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு நன்கு பரிசோதிக்க வேண்டும். புதிதாக ஏதேனும் பாதவெடிப்புகள்/ புண்கள்/ முள் குத்திய தடம் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

3.அடுத்து உங்களின் விரல்களைக் கொண்டு பாதங்களை அழுத்திப்பார்க்க வேண்டும். பல நேரம் முள் குத்திய காயம் வலியே இருக்காது. ஆனால் அந்த இடத்தில் அழுத்தினால் வலி தெரியும். (PALPATION) அப்படி வலி தெரிந்தால் உடனே அடுத்த நாள் காலை மருத்துவரை நாட வேண்டும்.

4. வாரம் ஒரு முறை கட்டாயம் கால் நகங்களை வெட்ட வேண்டும். நகங்களை வெட்டும்போது தோலோடு ஒட்ட வெட்டக்கூடாது. அப்படி வெட்டும்போது தெரியாமல் புண் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு

5. பித்த வெடிப்புகள் இருந்தால் தேங்காய் எண்ணெய் / நீரிழிவு நோயாளிகள் பாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய மாய்ஸ்ச்சரைசர் க்ரீம்களை தடவலாம். கால் பாதங்கள் வரவரவென்று இருப்பதை தவிர்க்க வேண்டும்.

6. கால் விரல்களுக்கு இடுக்கில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக துடைத்து விட வேண்டும். கால்கள் தண்ணீரில் எப்போதும் படுமாறு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப்புண் எரும் பூஞ்சை தொற்று ஏற்படலாம். ஆகவே அவர்கள் தினமும் கால் விரல்களுக்கு இடுக்கில் உள்ள இடங்களில் சேற்றுப்புண் (Athletes foot) இருக்கிறதா? என்று பார்த்து இருந்தால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.

7. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 50 வயதைத் தாண்டியவர்ளாக இருப்பதால் கிட்டப்பார்வை சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே அதற்குரிய லென்ஸ் கொண்டு பாதங்களை பார்க்கலாம்

8. கால் பாதங்களில் புண் ஏற்பட்டால் போர்க்கால நடவடிக்கையில் சிகிச்சை எடுக்க வேண்டும். கட்டாயம் கட்டு போடப்பட வேண்டும். கட்டு போடாமல் வெறும் காலில் புண்ணோடு நடப்பது தவறு. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை எடுக்க வேண்டும்.

9. நீரிழிவு நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் செருப்பு அணியாமல் செல்லக்கூடாது. காலணிகள் மிகவும் முக்கியமானவை.
நியூரோபதி வந்தவர்கள் MCR சப்பல் எனும் காலணிகளை வாங்கி அணியலாம். குளிர் காலத்தில் வீட்டில் இருந்தால் கால்களில் சாக்ஸ் அணியலாம். வெளியே ஷுக்கள் அணிந்து செல்லலாம். முட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் ஷூக்கள் அணிந்து வெளியே செல்வது சிறந்தது.
காலை வாக்கிங் செல்பவர்கள் - ஷூ அணியாமல் செல்லக்கூடாது.

10. முக்கியமான பரிந்துரை

நீரிழிவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை வீட்டிலேயே க்ளூக்கோமீட்டர் கொண்டு சோதித்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரித்தால் இந்த நியூரோபதி வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மருத்துவரிடம் சரியாக காண்பித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்குரிய மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும்.

முகத்தை அழகாக தினமும் கண்ணாடியைப் பார்த்து பராமரிப்பதை விட பல மடங்கு கவனமாக நமது பாதங்களை பராமரிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி காலையோ விரலையோ இழக்கும் அபாய நிலையை அடையாமல் நீரிழிவு நோயாளி இல்லா இந்தியாவை உருவாக்க பயணப்படுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com