இந்தியாவில் 80%க்கும் அதிகமானோருக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு - ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் 80%க்கும் அதிகமானோருக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு - ஆய்வு சொல்வது என்ன?
இந்தியாவில் 80%க்கும் அதிகமானோருக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு - ஆய்வு சொல்வது என்ன?

இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியான ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. நுண்ணூட்டச்சத்து குறைபாடு எதனால் ஏற்படுகிறது? இதற்கு உணவுமுறையில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடு (Micronutrient deficiency) என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போதுமான அளவு கிடைக்காததே நுண்ணூட்டச்சத்து குறைபாடு எனப்படுகிறது. இதனால் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் போன்றவை மேம்பாடு அடையாமல் தடைபடுகிறது. இந்தியாவில் கடுமையான நுண்ணூட்டச்சத்து குறைபாடு ஏற்பட முக்கிய காரணம், தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையே என்கிறது அந்த ஆய்வறிக்கை.

அறிகுறிகள்

21 இந்திய சுகாதாரப் பயிற்சியாளர்களைக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, சோர்வு, தூக்கமின்மை, போதிய ஆற்றலின்மை, உடல்நலக்குறைபாடு மற்றும் பசியின்மை போன்றவை நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டின் முதற்கட்ட அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் 50% கர்ப்பிணிகள் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிலும், தவறான உணவுப்பழக்கம், போதிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளாமை போன்றவற்றால் நகர்புறங்களில் வாழும் 62 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ரத்தசோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்

நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் தீவிர மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுவது தெரியவந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது அது நோய்க்கிருமிகள் எளிதில் உடலில் சேரவும், உடல்நலக்குறைபாடுகள் ஏற்படவும் வழிவகுக்கும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.

நுண்ணூட்ட குறைபாட்டை சரிசெய்ய ஜின்க், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் டி போன்ற மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முக்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் தீவிர மூச்சுத்திணறல் பிரச்னை வருவது தடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com