என்னது! சிரிச்சா தூங்கிருவாங்களா? - விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண் #Narcolepsy

மயக்கநிலையின் அனைத்து அறிகுறிகளும் தென்பட்டாலும், தூங்கும்போதும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருக்கிறாராம் பெல்லா.
Bella Kilmartin
Bella Kilmartin@infos2plus, Twitter

சிரித்தாலே போதும்; தான் விரும்பாவிட்டாலும் தூங்கிவிடும் விசித்திர பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் 24 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர்.

சிரித்தாலே போதும்; தான் விரும்பாவிட்டாலும் தூங்கிவிடும் விசித்திர பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் 24 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர்.

பிரிட்டனின் பர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த பெல்லா கில்மார்ட்டின் என்ற இளம்பெண், இரவு பார்ட்டிகள், நீச்சல் குளம் என எங்குசென்றாலும் சிரித்தவுடன் தூங்கிவிடுகிறாராம். பெல்லா டீனேஜராக இருந்தபோது நீச்சல்குளத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு பிறகு நார்கோலாப்ஸி என்ற பிரச்னை அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பார்மசிஸ்டாக பணிபுரியும் பெல்லாவுக்கு cataplexy என்று சொல்லக்கூடிய அசைவற்றுப்போகும் பிரச்னையும் இருக்கிறது.

இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு, வலுவான உணர்ச்சிகள் தசை பலவீனத்திற்கு வழிவகுக்கும். பெல்லாவை பொருத்தவரை அவர் சிரிக்கும்போது அது திடீர் தசை பலவீனத்தை ஏற்படுத்துவதால் உடனடியாக தூக்கநிலைக்கு சென்றுவிடுகிறார்.

”நான் எதிர்பாராத நேரத்தில் வேடிக்கையான நிகழ்வுகள் நடக்கும்போது என்னுடைய நிலை மேலும் மோசமாகிறது. சாதாரணமான சிறு சிரிப்புகளைவிட, திடீரென எதிர்பாராத நேரத்தில் வாய்விட்டு சிரித்துவிட்டால் அவ்வளவுதான். நான் என்னுடைய அனைத்து தசைகளின் கட்டுப்பாடுகளையும் இழந்துவிடுவேன். ஆனால் இது சிரிக்கும்போது மட்டும்தான்” என்கிறார் பெல்லா.

மயக்கநிலையின் அனைத்து அறிகுறிகளும் தென்பட்டாலும், தூங்கும்போதும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருக்கிறாராம் பெல்லா.

Narcolepsy
Narcolepsy Pixabay

”என்னுடைய மூட்டுகள் பலவீனமாகி, தலை சாய்ந்துவிடுகிறது. ஆனாலும், நான் சுயநினைவுடனும், விழிப்புடனும், என்னை சுற்றி நடப்பவற்றை கவனித்துக்கொண்டேதான் இருப்பேன். ஆனால் என்னுடைய உடலைத்தான் அசைக்கமுடியாது. நிறையநேரங்களில் சூடான டீயை என்மீது ஊற்றிக்கொள்வேன். ஆனாலும் அதனை தடுக்கநினைத்தாலும் என்னுடைய கைகளை அசைக்கமுடியாது.

என்ன நடந்தாலும் என்னால் சூழ்நிலைகளை சமாளிக்க முடியாது. சில நேரங்களில் சற்று பயமாக இருக்கும். உட்கார்ந்திருக்கும்போதோ, நான் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்போதோ இப்படி நிகழ்ந்தால் கவலைப்படமாட்டேன். வாழ்க்கைமுறை மாற்றங்களால் தற்போது நிலைமையை சமாளிக்க முடிகிறது” என்கிறார் பெல்லா.

நார்கோலெப்ஸி (narcolepsy) என்றால் என்ன?

தேசிய சுகாதார சேவைகளின் கூற்றுப்படி, நார்கோலெப்ஸி என்பது, ஒருவரால் எப்போது தூங்கலாம் அல்லது எப்போது எழுந்திருக்கலாம் என்பதை முடிவுசெய்ய முடியாத நிலை. அவர்களுடைய மூளை, உறக்கநிலை வடிவங்களை சீரமைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்படுவதே நார்கோலெப்ஸி என்கிறது.

Narcolepsy
Narcolepsy Pixabay

இதனால்,

  • பகல்நேரத்தில் அதீத தூக்கம் மற்றும் நாள்முழுவதும் மயக்கநிலையிலேயே இருத்தல்

  • தூக்க தாக்குதல்கள்

  • கேட்டாப்ளெக்ஸி, தற்காலிகமாக தசை கட்டுப்பாட்டை இழத்தல்

  • தூக்க முடக்கம்

  • இரவில் நடத்தல்

தீவிரமான அல்லது நாள்பட்ட உடல்நல பிரச்னைகளுக்கு நார்கோலெப்ஸி வழிவகுக்காது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அதேசமயம் தினசரி வாழ்க்கையில், உணர்ச்சிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

நார்கோலெப்ஸி எதனால் ஏற்படுகிறது?

ஓரெக்சின் என்ற மூளை ரசாயானம் அல்லது விழிப்பை ஒழுங்குபடுத்தும் ஹைபோக்ரெட்டினின் குறைவே நார்கோலெப்ஸி பிரச்னைக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தி பிரச்னை என்பதால், நோயெதிர்ப்பு அமைப்பானது செல்களை தவறாக தாக்குவதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இருப்பினும், நார்கோலெப்ஸியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே இவைதான் காரணமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்த பிரச்னைக்கான தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சில சாத்தியமான தூண்டுதல்கள்:

  • ஹார்மோன் மாற்றங்கள்

  • உளவியல் அழுத்தங்கள்

  • ஸ்வைன் ஃப்ளூ போன்ற தொற்றுக்கள்

Narcolepsy
Narcolepsy Pixabay

சிகிச்சை முறைகள்

தற்போது நார்கோலெப்ஸி பிரச்னைக்கென்று முறையான சிகிச்சைமுறை இல்லையென்றாலும் வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்படுத்துவது சில முன்னேற்றங்களை கொடுக்கும்.

  • தூக்க பழக்கங்களை மேம்படுத்துதல்

  • தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது தாக்கங்களை குறைக்கும்

  • அடிக்கடி மற்றும் சிறு தூக்கம் நாள்முழுதும் அவசியம்

  • தினசரி படுக்கைக்கு செல்லும் நேரத்தை முறைப்படுத்துதல்

இவற்றை பின்பற்றும்போது நார்கோலெப்ஸி பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com