இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவது எப்படி? மருத்துவர் கூறும் ஆலோசனை

உலக உயர் இரத்த அழுத்த நாளான இன்று, ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மகப்பேறு மருத்துவர் ரேவதி மணிபாலன் கூறும் தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்!
High Blood pressure
High Blood pressureFreepik

“விழிப்புணர்வு குறிக்கோள்: 'Measure your BP accurately , Control it. Long Live'

அதாவது, 'இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்' இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்) வின் குறிக்கோள்.

BP, பெரியவர்களுக்கான பாதிப்பென யார் சொன்னது?

1) ‘இரத்த அழுத்தம்’ எனும் வார்த்தையை அனைவருமே பழகுவோம். ஏனெனில் இரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பதைப் பற்றி அறியாதவர்களுக்கும், அறிந்துகொள்ள சோம்பல் படுபவர்களுக்கும் விழிப்புணர்வு தரக்கூடிய ஓர் உந்துதல் வார்த்தையாக இது இருக்கும்.

2) நாமே கூட இத்தனை வருடங்களில் BP செக் செய்ய நேரமில்லாமல் அல்லது மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்திருப்போம். இது தவறான செயல். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். ஆகவே.... முதலில் நம் இரத்த அழுத்தத்தை நாம் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வோம்.

3) இரத்த அழுத்தமானது, மற்ற பாதிப்புகளைப்போன்று அறிகுறிகள் ஏதுமற்று சாதாரணமாக வருவதால், நாமே முன்சென்று பொதுவான ஸ்க்ரீனிங் மூலம் இதை தெரிந்து கொள்வது நலம். பொதுவாக நாம் ‘நோய்பாதிப்பு என்றால் வயதானவர்களுக்கு மட்டும் தான வரும்’ என்று நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. இரத்த அழுத்தமானது வயதானவர்களுக்கு மட்டுமல்ல; இளைஞர்களுக்குமான பாதிப்பு. அதுவும் எவ்வித முன்றிவிப்பபுமின்றி வரக்கூடியது. ஆகவே, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருமே அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் தொற்றாநோய் பிரிவுகளில் ரத்த அழுத்தத்துக்கான ஸ்க்ரீனிங் செய்துக்கொள்வது அவசியம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

* கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியும் இருந்த குழந்தைகள் பெரும்பாலானோர் இந்த 'பப்ஜி' ' ஃப்ரீ ஃபயர்' போன்ற கேம்களில் அடைக்கலமாகி விட்டதைக் கொரோனாவின் சாபம் என்று தான் சொல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட சைனா வெர்ஷன் - கொரியன் வெர்ஷன் என்று தாவித் தாவி 'Hit Him' 'Kill Him' என்று கத்திக் கொண்டே... அதிகரித்த இதயத் துடிப்புகளோடு குழந்தைகள் விளையாடும் ஆட்டங்கள், அவர்களையும் இந்த பேராபத்தில் பாரபட்சமின்றி தள்ளி விடுகின்றன.

* ஆண் பெண் இருவருமே இரத்த அழுத்தத்தால் சம விகிதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.

டாக்டர் ரேவதி மணிபாலன்
டாக்டர் ரேவதி மணிபாலன்PT

* நீண்ட கால அதிக இரத்த அழுத்தமானது இதயத் தமனிகளை பாதித்தும், சிறுநீரகங்களைப் பாதித்தும், மாரடைப்பு மூலமாகவும் இறப்பிற்கான காரணமாக அமைகிறது.

* ஒரு சிலருக்குத் தாங்க முடியாத தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மங்கலான பார்வை, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

* முன்பெல்லாம் பெண்கள் அழுது அவர்களது உணர்வுகளை வடித்து விடுவதால் அவர்கள் இரத்த அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு அழக்கூட நேரம் இருப்பதில்லை. ஆகவே... இந்நாளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இரத்த அழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மையான தகவல்.

* ஆண்களுக்கானாலும் சரி; பெண்களுக்கானாலும் சரி தொடர் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். இது அவர்களுக்கு பாலியல் வறட்சியை உண்டு பண்ணுவதாகவும் கண்டறியப்படுகிறது. ஆகவே எப்போதும் முன்னெச்சரிக்கை தேவை.

சரி... இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான வழி என்ன?

1.வாழ்வியல் முறை மாற்றங்கள் (Lifestyle modification) மட்டுமே உயர் இரத்த அழுத்தத்திலிருந்து தற்காத்துக் கொளவதற்கான ஒரே வழி.

2.ஒரு நாளைக்குக் குறைந்தது 8 மணிநேர தூக்கம்.

3.தினமும் 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மிதமான உடற்பயிற்சி.

4.தண்ணீர் உள்ளிட்ட நிறைய திரவ ஆகாரங்கள் உட்கொள்ளுதல்.

5. பழங்கள் காய்கறிகள் என நார்ர்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுவகைகளை உட்கொள்ளல்.

6.அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல்.

7.மது சிகரெட் இரண்டையும் தவிர்த்தல்.

8. தேவையில்லாத டென்ஷனை குறைத்து மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா பழகுதல்.

9.முக்கியமாக திட்டமிட்ட உடற்பயிற்சி சாத்தியமில்லை எனில், உடற்பயிற்சியைத் திட்டமிட்டபடி செய்வதற்கென்றே 'நாம் சோர்ந்து போகாமல் தட்டிக் கொடுக்கும் தகுந்த (companion) துணையைத் தேர்ந்தெடுத்து' consistency மாறாமல் தொலையாமல் பார்த்துக் கொள்வது.

இந்த எளிய நடைமுறைகளை பழக்கப்படுத்திக்கொண்டால் நீங்களும் என்றும் நலமுடன் வாழலாம்!”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com