யோகப் பயிற்சி
யோகப் பயிற்சியோகப் பயிற்சி

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

சிவ நமஸ்காரம்: உடல் இயக்கம் மற்றும் ஆற்றலில் சமநிலை உருவாக்கும் யோகா
Published on

நம் மரபில் உடல் மற்றும் உள்ளத்தின் சமநிலை எப்போதுமே முக்கியமாக கருதப்பட்டுள்ளது. இன்று உடற்பயிற்சி மற்றும் உடல் நலன் ஆகியவை நவீன கால வாழ்கை முறையாக மாறியிருக்கிறது. ஆனால் கடந்த தலைமுறையில் உடற்பயிற்சி என்பது நம் வாழ்வியலோடு இணைந்திருந்தது. ஆரோக்கிய தளத்தில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் உடற்பயிற்சி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஆன்மீகத்தில் உள்ள நான்கு மார்கங்களில் ஒரு மார்கத்தில், உடல் சார்ந்த பயிற்சிகள், சாதனாக்கள் இருக்கின்றன. விநாயகரை வணங்கும் போது கூட தோப்பு கரணமிட்டு வணங்கும் பண்பை குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுக்கிறோம். மேலும் தெய்வீகத்துடன் நெருக்கமாக இருக்க பாத யாத்திரை, கோவிலை பிரதக்ஷணம் செய்தல் உள்ளிட்ட பல உடல் சார்ந்த சடங்குகளை நாம் பின்பற்றுவது உண்டு.

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றார் திருமூலர். அந்த ஆலயத்தின் மேன்மையை இது போன்ற உடல் சார்ந்த சாதனாக்கள் மூலம் நாம் கூர்மைப்படுத்த முடியும். அவ்வாறு உடல் நலனை மேம்படுத்தும் போது உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணர முடியும்.

சூர்ய நமஸ்காரம், ஹட யோகா உள்ளிட்ட ஏராளமான உடல் சார்ந்த சாதனாக்களை ஆன்மீக சாதகர்கள் அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அந்த வகையில் சிவனின் அங்கமாக மாறும் ஒரு வாய்ப்பாக சிவாங்கா சாதனா கருதப்படுகிறது. சிவாங்கா சாதனாவின் அடிப்படையாக இருப்பது சிவ நமஸ்காரம் என சொல்லப்படும் சாதனா. இது சிவனை வணங்குவதற்கான ஒரு முறை. இது ஏழு சக்தி வாய்ந்த நிலைகளை கொண்டது. தெய்வீக அருளை முழுமையாக உள்வாங்க இந்த சாதனா உதவுகிறது. உடல் இயக்கம் மற்றும் ஆற்றலின் தீவிரத்திலும் சமநிலையை உருவாக்குகிறது.

குறிப்பிட்ட ஏழு நிலைகளையும் ஒருவர் செய்கிறபோது அது ஒரு சுற்று சிவ நமஸ்காரம் ஆகிறது. இவ்வாறாக, சிவாங்க சாதனா மேற்கொள்ளும் 42 நாட்களும், தினசரி 21 முறை சூரியோதயத்திற்கு முன்பு அல்லது சூரியோதயத்திற்கு பின்பு முழுமையான அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
சிவாங்கா சாதனா என்பதே இந்த சக்தி வாய்ந்த பயிற்சியின் தீட்சையை பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஒருவருக்குள் இருக்கும் பக்தியை தீவிரப்படுத்தவும், படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருக்கவும் இந்த சிவாங்கா சாதனா மேற்கொள்ளப்படுகிறது. 42-ஆம் நாளின் இறுதியில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் இந்த சாதனா நிறைவடைந்தாலும், தெய்வீகத்தின் அருளை நாம் எப்போதும் உணர முடியும்.

அதுமட்டுமின்றி தெய்வீக அம்சத்தை நம்மை நோக்கி அழைத்து வரும் புனித ஆதியோகி ரத யாத்திரையிலும் சிவாங்கா சாதகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகியை நேரில் தரிசிக்காதவர்களும, அவரின் தரிசனம் கிடைக்கும் விதமாக ஆதியோகி ரதம் தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் உள்ளது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரை இம்மாதம் 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி அன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com