உடலுறுப்பு தானம்: நாட்டிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு
செய்தியாளர் ரமேஷ்
நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெறுவதை முறைப்படுத்துவதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு, `உடல் உறுப்பு தானத் திட்டத்தை’ தமிழ்நாடு அரசு தொடங்கியது.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலோடு, உயிரிழந்தவர்களின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கை, கால்கள் உள்ளிட்ட முக்கியமான உடல் உறுப்புகள், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தால் பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் வெறும் 7 பேரிடம் மட்டுமே உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ஆவது ஆண்டில் உடல் உறுப்பு தானம் பெறுவதில் தமிழ்நாடு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. மொத்தமுள்ள 262 பேரிடமிருந்து, 91 இதயம், 442 சிறுநீரகம், 203 கல்லீரல் உள்ளிட்ட முக்கியமான உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டிருக்கின்றன. அதேசமயம், இந்த ஆண்டில் சிறுநீரகத்துக்காக மட்டுமே 7,268 பேர் காத்திருக்கின்றனர். மேலும், கல்லீரலுக்காக 511 பேரும், இதய மாற்றுக்காக 73 பேரும் காத்திருக்கின்றனர்.
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்வது தனக்கு பெருமகிழ்ச்சி தருவதாக கூறுகிறார் 16 ஆண்டுகளுக்கு முன் இத்திட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவரான மருத்துவர் அமலோற்பவநாதன்.
அவர் கூறுகையில், “ஏராளமான உயிர்களை காப்பாற்ற உதவும் உடலுறுப்பு தானத்தை செய்ய அனைவரும் தயக்கமின்றி முன்வர வேண்டும். உடலுறுப்பு தானம் தருபவருக்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படுவது மட்டுமின்றி பிற்காலத்தில் அவரது குடும்பத்தினரின் நலன் காக்கவும் அரசு அக்கறை காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.