அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு! ஆசிரியரை போராடி உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு! ஆசிரியரை போராடி உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!
அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு! ஆசிரியரை போராடி உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட நபரை காப்பாற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மனம் தளராத போராட்டத்தால் தவிர்க்கப்பட்ட மரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 36 வயதான இவர் சென்னை மடுவங்கரையில் உள்ள சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன் ராஜேஷ் பள்ளிக்கு சென்றபோது , லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

நொடியும் தாமதிக்காமல் ராஜேஷை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இதயத் துடிப்பு முற்றிலும் நின்று, ராஜேஷ் நிலை குலைந்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்களும், நெஞ்சுவலி சிகிச்சை மைய மருத்துவர்களும் இணைந்து நோயாளி மீண்டும் உயிர்பெறத் தேவையான சிகிச்சையையும், DEFIBRILLATORS மூலம் சிறிது இடைவெளிகளில் 5 முறை ஷாக்கும் கொடுத்துள்ளனர். இதனிடையே சிபிஆர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. 6 முறை மாரடைப்பு ஏற்பட்டும் மருத்துவர்கள் மனம் தளராமல் போராடி ராஜேஷின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இளையோருக்கு மாரடைப்புகள் அதிகரித்து விட்டதால், சிறிது நெஞ்சுவலி ஏற்பட்டால் கூட இதய பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ராஜேஷுக்கு சிகிச்சை அளித்த இதயவியல் நிபுணர் பிரதாப். 

புள்ளி விவரங்களின்படி இதுவரை 3 முறை மாரடைப்பு ஏற்பட்டோர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதால் ராஜீவ் காந்தி மருத்துவர்கள் செய்ததை புதிய ஆய்வுக் கட்டுரையாக வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் தேரணிராஜன் கூறினார்.

GOLDEN HOUR என்று சொல்லப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இதயவியல் நிபுணர்களை அணுகினால் போதும், மாரடைப்பிலிருந்து மீண்டு விடலாம் என்பதே மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com