“உலகம் உயிர்த்திருக்க குருதிக்கொடை அவசியம்”- விழிப்புணர்வு குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள்
இன்று உலக குருதிக் கொடையாளர்களுக்கான தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சமூக வலைதளம் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஒருசிலரின் விழிப்புணர்வு பகிர்வுகள் இங்கே.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி:
“விலைமதிப்பற்ற ரத்தத்தை தானமாக வழங்கி, விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்க பேருதவியாக இருக்கும் ரத்த தானத்தின் மகத்துவம் போற்றுவோம். அனைவருக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்:
“உலகம் உயிர்த்திருக்க குருதிக்கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்ய வேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்”
நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
"குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக் காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.
குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும் என்ற உயரிய நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திலேயே அதிக குருதிக்கொடை வழங்கும் அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.
நோய்த்தொற்று தாக்கத்தால் சமூகமே பேரிடரின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் அசாதாரண சூழலில், குருதிக்கொடையின் அவசியத்தை உணர்த்தி, அதனை பெரும் சமூக இயக்கமாக முன்னெடுக்கவும் அதன் தேவையை அனைவரும் உணரும்படி செய்து, பங்கேற்பாளராக மாற்றவும் தீவிரப் பரப்புரையை முன்னெடுப்போம்”
இவர்கள் மட்டுமன்றி, தமிழக அரசு சார்பிலும் இந்த தினத்துக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனொரு பகுதியாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குருதிக் கொடையளித்து, ரத்த தான நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
மனித உயிர் அரியது அதைகாக்கும் இரத்த தானம் பெரியது!