பணிச்சுமையால் முதுநிலை மருத்துவ மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறதா? - மூத்த மருத்துவர்கள் கருத்து
பணிச்சுமை அதிகரிப்பால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரணங்களை விளக்குகிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.
சிவபாலன், மனநல மருத்துவர்:
”பதினொன்றாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக்கு பயிற்சி, MBBS சேர்ந்த பின் மூன்றாம் ஆண்டு முதல் Neet முதுநிலை தேர்வுக்கான பயிற்சி என கடின முயற்சிக்குப் பிறகு, தேர்வில் தேர்ச்சி பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் சேர, அதற்கான நீட் பயிற்சியையும் பெற வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ”மற்ற நிலைகளில் நீட் தேர்வுக்கு தயாராவது இரண்டு மடங்கு பாரமென்றால், முதுநிலை மருத்துவம் படித்துக்கொண்டே நீட் தேர்வுக்கு தயாராவது ஒரு பெரும் போரை எதிர்கொள்வது போல் உள்ளதாக, மருத்துவ மாணவர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, 48 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுவதால், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் மன அழுத்தத்தை சந்திக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் சிவபாலன்.
விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் :
பணிச்சுமை இருந்தால், பயிற்சி மருத்துவர்களின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார் மூத்த மருத்துவர் விஜயலட்சுமி.
“அதிக நேரம் பணியாற்றினால் மனிதனின் செயல்திறன் குறையக்கூடும். 8 மணி நேரம் பணியாற்றினால் மனிதனின் மூளை நன்றாக இயங்கும்.
“24 மணி நேரம் தூக்கமின்றி பணியாற்றினால் செயல்திறன் குறையும். மக்கள் உயிருடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இது ஒரு பிரச்னையாகும்.
பணிநேரம் மட்டுமல்லாமல், கர்ப்ப கால விடுமுறை எடுத்தால் ஊக்கத் தொகை வழக்கப்படாமல் இருத்தல், மாதவிடாய் விடுப்பின்மை, வார விடுப்பின்மை உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர் மருத்துவ மாணவர்கள்” என்கிறார் மூத்த மருத்துவர் விஜயலட்சுமி.