”பிரசவ ரத்தப்போக்கால் 43,000 பெண்கள் மரணம்” - தி லான்செட் இதழின் ஆய்வு எச்சரிக்கை!
உலகளவில் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பதற்கு, பிரசவத்துக்குப் பிறகான அதிக ரத்தப்போக்கே முக்கியக் காரணமாக இருப்பதாக 'தி லான்செட்' மருத்துவ இதழின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. முறையான விழிப்புணர்வு இல்லாததால், உலகெங்கும் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு தாய் அதிக ரத்தப்போக்கால் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 2.7 கோடி பெண்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், 43 ஆயிரம் பெண்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றனர். இது ஏழை மற்றும் நடுத்தர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகம் நிகழ்கிறது. இதைத் தடுக்க, தோராயமாக ரத்த இழப்பைக் கணிப்பதைத் தவிர்த்து, துல்லியமான அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என லான்செட் பரிந்துரைத்துள்ளது.
மேலும், ரத்தப்போக்கை முன்கூட்டியே கண்டறிந்து, கர்ப்பப்பை மசாஜ் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை வழங்கும் இ- மோட்டிவ் என்ற 5 அம்ச எளிய முதலுதவி சிகிச்சை முறையையும் இந்த ஆய்வு முன்மொழிந்துள்ளது. உலக நாடுகள் தங்களது சுகாதார பட்ஜெட்டில் 5 சதவீதத்தை இதில் முதலீடு செய்தாலே, ஆயிரக்கணக்கான தாய்மார்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட் இதழ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை புதிய தலைமுறையிடம் பேசியுள்ள மகப்பேறு மருத்துவர் நந்தினி, பிரசவ கால ரத்தப்போக்கால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பிரசவங்களுக்குப் பெண்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

