“முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தோம்” - கண்ணீர் மல்க குழந்தையை காப்பாற்றக் கோரும் பெற்றோர்
நாகையில் உடல் முழுவதும் எலும்புகள் திடீர் திடீரென்று உடையும் நோயால் உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற வேண்டி, ஏழை பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாகை மாவட்டம் குறிச்சியை சேர்ந்தவர் 31 வயதான காந்தரூபன். கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கங்கா(26). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணமாகி, பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், ஏழை தம்பதியினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்காமல், குழந்தைக்கு ஒரு வயதாகி நடக்க துவங்கும் போது, குழந்தையின் எலும்புகள் உடையத் தொடங்கியிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவனையில் சேர்த்து, சிகிச்சைக்கு உட்படுத்தி வருகின்றனர். தற்போது 3 வயதாகிய அந்தப் பெண் குழந்தையின் உடம்பில் இருக்கும் எலும்புகள் திடீர் திடீரென்று உடைந்து விடுவதால், சோகத்தில் மூழ்கி இருக்கும் பெற்றோர்கள், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாகைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.
அதில் நடவடிக்கை எதுவும் இல்லாததால், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண்தம்புராஜிடம், நோயால் அவதிப்படும் தங்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டி இன்று மனு அளித்தனர். ஆட்சியர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வருக்கு மனுவை பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குழந்தையின் பெற்றோர் நம்மிடையே கூறுகையில், "ஏற்கனவே பிறந்த பெண் குழந்தை 3 வயதில் திடீரென்று இறந்தது. இந்தக் குழந்தை ஒரு வயதில் இருந்து எலும்பு முறிவு நோயால் அவதிப்படுகிறது. நாகை, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து சென்று வருகிறோம். அவர்கள் கால்சியம் குறைபாடு எனக்கூறி மாத்திரைகள் மட்டும் வழங்குகின்றனர். எதனால் எலும்புகள் திடீர் திடீரென்று உடைகிறது என தெரியவில்லை.
கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையில் வாழும் எங்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலவில்லை. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற கூட்டத்தில் வழங்கிய எங்கள் மனு, கொங்கு மண்டலத்திற்கு மாறி சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசு கருணை கூர்ந்து எங்கள் குழந்தையின் நோயின் தன்மையை கண்டறிந்து, சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றித்தர வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.