`அக்டோபர் மாதத்திலிருந்து தடுப்பூசி செலுத்துவதில் மாற்றங்கள் வருகிறது’- அமைச்சர் பேட்டி

`அக்டோபர் மாதத்திலிருந்து தடுப்பூசி செலுத்துவதில் மாற்றங்கள் வருகிறது’- அமைச்சர் பேட்டி
`அக்டோபர் மாதத்திலிருந்து தடுப்பூசி செலுத்துவதில் மாற்றங்கள் வருகிறது’- அமைச்சர் பேட்டி

“அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமை தோறும் போடப்படும்” என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பில் இன்று 37 வது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி தொடருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது என்னவெனில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாக, 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 8,713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்; சென்னையில் உள்ள 159 நகர்புற சுகாதார நிலையங்கள்; 292 வட்டார மருத்துவமனைகள்; 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தமாக 11,333 அரசு மருத்துவமனைகளில் அக்டோபர் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

பிறந்த குழந்தை முதல், முதியவர்கள் வரை என 13 வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்படும். அடுத்த வாரம் நடைபெறும் 38-வது கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம், கடைசி தடுப்பூசி முகாமாக இருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவுபெறுகிறது. அதன் பின் பூஸ்டர் டோஸ் தப்பூசிக்கு சலுகை கிடைக்குமா என்பது தெரியவில்லை” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கூறியுள்ள நிலையில், அதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதர்கு பதிலளித்த அவர், “பள்ளி விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவதே இப்போது முதன்மையாக உள்ளது. Influenza காய்ச்சல் பற்றி பேசிய அவர் 1044 பேர்கள் influenza காய்ச்சல் மூலம் பாதிக்கப்ப்பட்டு உள்ளனர். அதில் மருத்துவமனையில் 68 பேர் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com