மெக்னீசியம் மாத்திரைகளை அதிகம் எடுக்கிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!!
உடலின் ஆற்றல் உற்பத்தி, நரம்பு மண்டலச் செயல்பாடு, தசை இயக்கம், ரத்த அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியம் ஆகிய 300க்கும் மேற்பட்ட உயிரியல் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் மிகவும் அத்தியாவசியமான சத்தாகும். இருப்பினும், பெரும்பாலான மக்களுக்குத் தனிப்பட்ட மெக்னீசியம் மாத்திரைகள் தேவையில்லை என்று மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் அன்றாடம் சாப்பிடும் பாதாம், முந்திரி, பூசணி விதைகள், கைக்குத்தல் அரிசி, கோகோ தூள், பயறு வகைகள், மீன் மற்றும் பசலைக்கீரை போன்ற உணவுகளிலேயே உடலுக்குத் தேவையான மெக்னீசியம் சத்து போதுமான அளவில் கிடைத்துவிடுகிறது.
ஒரு ஆணுக்கு நாளொன்றுக்கு 400 முதல் 420 மில்லி கிராமும், பெண்ணுக்கு 310 முதல் 320 மில்லி கிராமும் கர்ப்பிணிகளுக்கு 350 முதல் 360 மில்லி கிராமும் மெக்னீசியம் சத்து போதுமானது. மாத்திரைகள் மூலம் அதிகபட்சமாக 350 மில்லி கிராம் மட்டுமே உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சரியான மருத்துவப் பரிசோதனை இன்றி, சமூக வலைத்தளங்களின் விளம்பரங்களைப் பார்த்து சுய மருத்துவமாக மெக்னீசியம் மாத்திரைகளை எடுப்பது செரிமானக் கோளாறுகள் மற்றும் பிற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், மெக்னீசியத்தில் கிளைசினேட், சிட்ரேட், மேலேட் மற்றும் ஆக்ஸைடு எனப் பல வேதியியல் வடிவங்கள் உள்ளதால், மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை உட்கொள்வது பக்கவிளைவுகளை உண்டாக்கும். இயற்கை உணவுகள் மூலம் இந்தச் சத்தைப் பெறுவதே பாதுகாப்பானது.

