ஏசி-யின் மூலம் பரவும் நோய்... உயிரையே கொல்லும் அபாயம்? எச்சரிக்கை விடுத்த ECDC!
ECDC எனப்படும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையமானது, இத்தாலியை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், “Legionnaires என்னும் ஒரு கொடிய வகை நுரையீரல் தொற்றால் தற்போது வரை 4 பேர் இங்கே உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே கவனத்தோடு பயணப்படுங்கள்” என்ற அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது.
Legionnaires எனும் கொடிய தொற்று?
இத்தாலியில் பரவும் Legionnaires நோய் என்பது ஒரு வகையான நிமோனியா / நுரையீரல் தொற்று எனப்படுகிறது. இந்த தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களானது, ஏசி மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் காற்றின் நீர்த்துளிகள் வழியாக பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நீர்த்துளிகளில் உள்ள பாக்டீரியாவானது சுவாசத்தின் மூலம் மனித உடலுக்குள் நுழைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிகுறிகள்:
இந்த பாக்டீரியாக்கள் நுரையீரல், மூளை மற்றும் குடலைப் பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். மிகவும் உயிருக்கு ஆபத்தானதாக கருத்தப்படும் இந்த நோய்க்கான அறிகுறியானது பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 2 - 14 நாட்களுக்கு பிறகு வெளிப்படுகிறது.
இது நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளில் சிலவற்றை கொண்டுள்ளது.
குறிப்பாக அதிக காய்ச்சல், தொடர்ந்து இருமல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தசை வலிகள், கடுமையான தலைவலி, குமட்டல், குழப்பம், இருமலில் ரத்தம், கடுமையான வயிற்று வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
யாரை அதிகம் தாக்கும்?
இந்த நோயானது 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களையும் எளிதில் தாக்குகிறது.
மேலும், இந்த பாக்டீரியா 60 க்கும் மேற்பட்ட வகைகளை கொண்டுள்ளது. அவை நீராவி, குளங்கள், மண், குடிநீர், ஏரிகள் போன்றவற்றில் இயற்கையாகவே காணப்படுவதாக தெரிகிறது.
இந்த வகையான தொற்றுதான் தற்போது இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள கோர்சிகா மற்றும் புக்கினாஸ்கோவில் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பால், இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை மேலும் பரவாமல் தடுப்பதற்காக, பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்தான முழு விவரம் இன்னும் முழுமையாக அறியப்படாததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் ECDC-யின் படி, பாதிக்கப்பவர்கள் 26 - 94 வயதில் இருப்பதாகாவும், இறந்த நான்கு பேரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கூடுதல் உடல் நலக்கோளாறுகள் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளன.