ஆர்த்ரிட்டிஸ்
ஆர்த்ரிட்டிஸ்ஆர்த்ரிட்டிஸ் பிரச்னையின் அறிகுறிகள்

ஜாக்கிரதை! இந்த அறிகுறிகள் ஆர்த்ரிட்டிஸின் ஆரம்பகட்டமாக இருக்கலாம்!

வயது மற்றும் பாலினபாகுபாடுகளின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளில் ஒன்று ஆர்த்ரிட்டிஸ். ஆரம்பகட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்தால் சிகிச்சையளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக இயங்குவதில் முக்கியப்பங்கு வகிப்பது எலும்புகள். அதற்கு குறிப்பாக மூட்டுகள் வலிமையுடன் இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் தினசரி நடவடிக்கைகளான நடத்தல், ஓடுதல் மற்றும் ஏறுதல் போன்ற அனைத்து செயல்களிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் நாம் நமது உறுதியை இழக்க நேரிடும். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெரும்பாலானோருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்று மூட்டு ஆர்த்ரிட்டிஸ். ஆனாலும், வயது மற்றும் பாலினபாகுபாடுகளின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

உலகளவில் 54 மில்லியன் மக்கள் ஆர்த்ரிட்டிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் குழந்தைகளுக்கு ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆரம்பகட்டத்திலேயே ஆர்த்ரிட்டிஸ் அறிகுறிகளை கண்டறிந்தால் சிகிச்சையளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சில ஆரம்பகட்ட அறிகுறிகள்...

மூட்டு பிடிப்பு

ஆர்த்ரிட்டிஸ் - மூட்டு பிடிப்பு
ஆர்த்ரிட்டிஸ் - மூட்டு பிடிப்பு

ஆர்த்ரிட்டிஸின் பொதுவான அறிகுறியாக மூட்டு பிடிப்பு கருதப்பட்டாலும், இந்த வலியானது மிகவும் மோசமானதாகவும், அசௌகர்யமாகவும் இருக்கும். நீண்ட நேரம் அமர்ந்தவண்ணமே இருந்தால் மூட்டு பிடிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் இந்த பிடிப்பு மற்றும் வலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் அது ஆஸ்டியோ - ஆர்த்ரிட்டிஸின் அறிகுறியாக இருக்கும். இதனை கவனத்தில் கொள்வது அவசியம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பாத பெருவிரல் வலி

ஆர்த்ரிட்டிஸ் - பாத பெருவிரல் வலி
ஆர்த்ரிட்டிஸ் - பாத பெருவிரல் வலி

பாதங்களின் பெருவிரல்களில் நாள்பட்ட வலி காணப்பட்டால், அது ஆர்த்ரிட்டிஸின் அறிகுறியாக இருக்கலாம். பெருவிரலை தொடும்போது மிகவும் சூடாக உணர்ந்தால் முடக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளில் புடைப்புகள்

ஆர்த்ரிட்டிஸ் - கைகளில் புடைப்புகள்
ஆர்த்ரிட்டிஸ் - கைகளில் புடைப்புகள்

ஆஸ்டியோ -ஆர்த்ரிட்டிஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் இரண்டிலும் கைகளில் புடைப்புகள் ஏற்படலாம். ஆஸ்டியோ- ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை ஏற்பட்டால் குருத்தெலும்புகள் தேய்ந்துபோவதால் எலும்புகள் புடைத்துவிடும். அதுவே ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை ஏற்பட்டால், கை மற்றும் பாதங்களில் உருவாகும் புடைப்புகள் ஒரேமாதிரியாக இருக்கும்.

இதனை ஹெபர்டன் முனைகள் என்றும் அழைக்கின்றனர். சிறிய, பட்டாணி அளவிலான குருத்தெலும்பு மேலே முளைத்து வரும் நிலை இது. இந்த புடைப்பானது விரல் நுனிகளை ஒட்டியுள்ள மூட்டுகளில் உருவாகும். இதனால் மிக கடுமையான வலி ஏற்படும். கைகளை அசைக்க முடியாது. விரல்கள் வீக்கமடைந்து பிடிப்பு ஏற்படும். இதனால் பாட்டில்களை திறத்தல், பட்டன் போடுதல் போன்ற தினசரி வேலைகளை செய்யமுடியாத நிலை ஏற்படும்.

தூங்குவதில் சிரமம்

ஆர்த்ரிட்டிஸ் - தூங்குவதில் சிரமம்
ஆர்த்ரிட்டிஸ் - தூங்குவதில் சிரமம்

ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த அசௌகர்யம் ஏற்படுவதால் அவர்களால் நிம்மதியாக தூங்கமுடியாது. போதிய தூக்கமின்மை வலியை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆர்த்ரிட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி, பிடிப்பு மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறட்டைவிட்டு தூங்குவர் என்கிறது ஆர்த்ரிட்டிஸ் ஃபவுண்டேஷன்.

சோர்வு

ஆர்த்ரிட்டிஸ் - சோர்வு
ஆர்த்ரிட்டிஸ் - சோர்வு

ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மூட்டுகளில் நிரந்தர வீக்கம் இருக்கும். இதனால் பலவீனம், தலைசுற்றல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனால் ஏற்படும் சோர்வானது மிகவும் மோசமான அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மிகவும் சோர்வாக உணர்பவர்களுக்கு காய்ச்சல் உணர்வும் இருப்பதாக அடிக்கடி கூறுவதாக விளக்குகின்றனர் மருத்துவர்கள்.

உடல் மற்றும் கை, கால்கள் கனமாகவும், அசைக்கமுடியாத உணர்வும் இருக்கும்

அதீத சோர்வு

சுத்தமாக எனர்ஜியே இல்லாமல் இருத்தல்

சோர்வானது எப்போது வரும் போகும் என்றே கணிக்கமுடியாத வகையில் அவ்வப்போது ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சொரியாசிஸ் அல்லது சிவப்பு திட்டுகள்

ஆர்த்ரிட்டிஸ் - சொரியாசிஸ்
ஆர்த்ரிட்டிஸ் - சொரியாசிஸ்

சரும செல்களின் வாழ்நாளை அதிகரிக்கும் ஒரு சரும பிரச்னைதான் சொரியாஸ். சரும மேற்பரப்பின்மீது செல்களை மேலும் அடுக்குவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு சொரியாடிக் ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் பாதிக்கப்பட்ட மூட்டுகள் வீங்கி, பிடிப்பு ஏற்பட்டு வலியை கொடுக்கும். சொரியாசிஸை போன்றே சொரியாசிஸ் ஆர்த்ரிட்டிஸும் நாள்பட்ட நோயாகும். நாட்கள் செல்ல செல்ல இதன் நிலைமை மோசமாகும் என்பதால் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவது நல்லது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com