”மார்பகப் புற்றுநோய் பற்றி வீடுகளுக்குள் பேசுவது அவசியம்”- கிருத்திகா உதயநிதி

”மார்பகப் புற்றுநோய் பற்றி வீடுகளுக்குள் பேசுவது அவசியம்”- கிருத்திகா உதயநிதி

”மார்பகப் புற்றுநோய் பற்றி வீடுகளுக்குள் பேசுவது அவசியம்”- கிருத்திகா உதயநிதி
Published on

சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த பைக்கத்தான் நிகழ்ச்சி ஒன்றை திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், டிக்டாக் பிரபலம் சசிலேயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கிருத்திகா உதயநிதி, “புற்றுநோய் என்றாலேயே எல்லோருக்கும் பயம் வந்துவிடுகிறது. இந்த பயம் காரணமாகத்தான், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு பலரும் தாமதமாக செல்கின்றனர். புற்றுநோய் என்ற வார்த்தையை நாம் சற்றே எளிமையாக்க வேண்டும். அப்போதுதான் அதுசார்ந்த விழிப்புணர்வு அதிகரிக்கும். புற்றுநோய் பற்றி வீடுகளுக்குள்ளும் பேச வேண்டும். பேசி, அதுபற்றிய கலந்தாலோசிக்கும் போதுதான் அதுபற்றிய விழிப்புணர்வை நம்மால் விரிவுபடுத்த முடியும்” எனக்கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பாடகி அனுராதா ஸ்ரீராம், “வீட்டிலேயே பரிசோதனை மேற்கொள்ள நடைமுறைகள் உள்ளதை மருத்துவர்கள் அறிவுரைப்படி அனைத்து பெண்களும் பின்பற்ற வேண்டும். இந்த சோதனைகள் குறித்து பெண்கள் அனைவரும் தங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, “மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவது, இன்றைய தேதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. மார்பக புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்தால் உயிர் சேதம் இல்லாமல் நம்மால் தடுக்கமுடியும்” என தெரிவித்தார். மார்பகப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வில் ஆண்களும் பங்கேற்று, அவர்களேவும் தங்கள் வீட்டில் மார்பக புற்றுநோய் குறித்து பேசக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com