தாய்ப்பால் வாரம்| தாய்ப்பால் குறித்து மருத்துவர் தரும் A - Z தகவல்கள்
தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் வண்ணம் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1- 7 வரை ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தவகையில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன? இதனால் தாயும் சேயும் பெறும் நன்மைகள் என்ன என்பதை குறித்து தெளிவாக இத்தொகுப்பில் பார்க்கலாம்.
இதுகுறித்து விளக்குகிறார் Lactation Consultant மருத்துவர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்
தாய்ப்பாலின் முக்கியத்துவம்
குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது, gloden hour of Breastfeeding என்றழைக்கப்படுகிறது. குழந்தை, தாய் என இருவருமே நலமாக இருக்கும்பொழுது இத்தகைய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு கிடைக்கும் vaccine போன்றது. ஆகவே, குறைந்தது 1 மணி நேரத்திற்குள்ளாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது சுகப்பிரசவம், சிசேரியன் என எல்லாவற்றிக்கும் பொருந்தும்.
எடுக்க வேண்டிய உணவு -தவிர்க்க வேண்டிய உணவு!
வீட்டில் சமைக்கும் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கஞ்சி போன்ற நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நிறைய நீர்ச்சத்து உடலிலிருந்து வெளியே செல்வதால், dehydration ஆகும். எனவே, நீர் சத்து அடங்கிய உணவுப்பொருட்களை கொடுக்கலாம்.
packed மற்றும் ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும்,ஒரு குறிப்பிட்ட உணவுகள் நல்லதென்று அதை மட்டுமே தொடர்ந்து சாப்பிடக் கூடாது.
உதாரணமாக, பூண்டு சாப்பிட்டால் பால் சுரக்கும் , வெந்தயம் சாப்பிட்டால் பால் சுரக்கும் என்று அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அதிகபடியான வெந்தயம் சைனஸ் பிரச்னையை ஏற்படுத்தும். மாட்டுப்பால் குடித்தால் அதிக தாய்ப்பால் சுரக்கும் என்ற நம்பிக்கையில் அதிகப்படியான மாட்டுப்பால் குடிப்பதால் குழந்தைக்கு மாட்டு பாலில் உள்ள புரதச்சத்து அலர்ஜி ஏற்படும். எனவே, அனைத்து உணவுகளையும், சமமாக, சரியான அளவில் , வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும்.
உடல் நலமில்லை என்றால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
தாய்க்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறில்லை.
ஆனால், கீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. அதேபோல, டைப்பாய்டு, மலேரியா போன்றவற்றால் தாய்ப் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத அளவிற்கு உடலுக்கு சோர்வு ஏற்பட்டிருப்பின், தாய்ப்பால் எடுத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
அளவு ஏதேனும் இருக்கிறதா?
தாய்ப்பால் கொடுக்கும் அளவு என்பது குழந்தைகளை பொறுத்து மாறுபடும்.
இது குழந்தைகளின் உடல் எடையை பொறுத்தும் (Term baby or pre term baby) மாறுபடும். ஆகவே, இவ்வளவுதான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற அளவை குறிப்பிட முடியாது.
முதல் 45 அல்லது 60 நாட்களில் சில குழந்தைகள் நிறைய தாய்ப்பால் அருந்துவர். 1 மணிநேரம், 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவர்.
அதுவே, 60 நாட்களுக்கு மேல் ஆகும்போது, குடிக்கும் நேரம் என்பது அடிக்கடி இல்லாமல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவர்.
ஆகவே, கால, நேரத்தை பொறுத்து குழந்தைகள் அருந்தும் தாய்ப்பாலின் அளவு என்பது மாறுபடும்
ஆரோக்கியத்தை எப்படி சோதிக்க வேண்டும்?
நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்கிறார்களா? என்று சோதிக்க வேண்டும்.
குழந்தை பிறக்கும்பொழுது 3 கிலோ எடை என்றால், 4-6 மாதத்திற்குள் குழந்தைகளின் எடைய இரட்டிப்பாக வேண்டும். 12 மாதத்திற்குள் மும்மடங்காக வேண்டும்.
தாய்க்கும் சேய்க்கும் கிடைக்கும் நன்மை என்ன?
தாய்ப்பால் அருந்துவதால் தாய், சேய் என இருவருமே பல வித நன்மைகளை அடைகிறார்கள்.
குழந்தைகளை பொறுத்தவரை:
குழந்தைகள் அலர்ஜி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு , சுவாசம் தொடர்பான தொற்றுகள், குடல் தொடர்பான நோய்கள் என அனைத்திலும் இருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
எதிர்ப்புசக்தி, புத்தி கூர்மை , பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தன்மை, தைரியம் இப்படி முழு ஆளுமை வளர்ச்சியே தாய்பால் அருந்துவதன் மூலம் பெறுகிறார்கள்.
குழந்தைகளுக்கான உணவாக மட்டுமே தாய்ப்பாலை பார்க்காமல், அவர்களின் உணர்ச்சியையும், ஆளுமையையும் மேம்படுத்தவும் இந்த தாய்பால் உதவி புரியும்.
தாய்மார்களை பொறுத்தவரை:
தாயை பொறுத்தவரை குழந்தைகள் குறித்த ஒரு புரிதல் கிடைக்கிறது. குழந்தைகள் ஏன் அழுகிறார்கள்? என்று புரிந்துக்கொள்ள முடியும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உடலில் ஒருவகையான சுரப்பி உருவாகும். இது தாய்மார்கள் நல்ல முறையில் தூங்க உதவி புரியும்.
கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உடல் எடை கூடாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரை 2 வருடம் - அல்லது அதற்கு மேலாக தாய்ப்பால் கொடுக்கலாம் என்று கூறுகிறது.
ஏற்படும் பிரச்னைகள் என்ன?
தாய்ப்பால் சரியாக கொடுக்காமல் உள்ளேயே தேங்கினால், வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் , உடல் வலி உண்டாகும். இதற்கு உடனடியாக மருத்துவரை சந்தித்து, அதற்கான சிகிச்சை பெறவேண்டும். தானாக சிகிச்சை எடுத்து கொண்டால் சீழ் கோர்த்து கொள்ள வாய்ப்புள்ளது. இதை அப்படியே விட்டால் முழுவதும் பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான mental Knowledge-ம் உள்ளது. ஆனால், physical knowledge இல்லை. போதுமான அளவு உடல் வலிமை இல்லாமல் இருப்பதே இவர்கள் உடல் சோர்வடைவதற்கான காரணங்களில் ஒன்று.

.png?rect=0%2C0%2C800%2C450&w=480&auto=format%2Ccompress&fit=max)