Smokers Alert: புகைப்பிடிப்பதால் உங்கள் இதயம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?

Smokers Alert: புகைப்பிடிப்பதால் உங்கள் இதயம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?
Smokers Alert: புகைப்பிடிப்பதால் உங்கள் இதயம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?

புகைப்பிடித்தால் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கும், உயிரையே காவு வாங்கும் புற்றுநோய் தொற்று ஏற்படும் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவையாக இருந்தாலும், சிகரெட் பழக்கம் இருப்பவர்களுடைய இதயத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று என்றாவது நினைத்து பார்த்ததுண்டா?

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஒருவரின் இதயம் தடிமனாக, பலவீனமாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வின் முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புகைப்பிடிப்பதால் இதயத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும் என்றும், அதனை விட்டொழித்தால் இதயத்தின் செயல்பாடு மீட்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் இதயத்தின் இடது பக்க அறையில் ரத்தின் அளவு குறைவாக இருக்கும் என்றும், அது உடலின் இதர பகுதிகளுக்கு வெளியேற்றும் சக்தி குறைவாக இருக்கும் என்றும் எந்த அளவுக்கு அதிகமாக ஒருவர் புகைப்பிடிக்கிறாரோ அந்த அளவுக்கு இதயத்தின் செயல்பாடு மோசமானதாக இருக்கும் எனவும் தெரிய வந்திருக்கிறது.

இதயத்தின் நலனை மீட்டெடுக்க வேண்டுமென்றால் புகைப்பிடிப்பதை நிறுத்தினால்தான் முடியும் என்றும், ஆகையால் இப்போதே புகைப்பிடிப்பதை விட்டாலும் எதுவும் கெட்டுப்போய்விடாது என ஹெர்லெவ் மற்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ஜென்டோஃப்ட் மருத்துவமனையின் ஆய்வு ஆசிரியர் டாக்டர் ஈவா ஹோல்ட் கூறியிருக்கிறார்.

புகைப்பழக்கத்தால் ஒரு ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் மூலம் அறிய முடிகிறது. உலகின் 50 சதவிகித இறப்புகள் சிகரெட் பிடிப்பவர்களால் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்றும், அதில் பெரும்பாலும் பெருந்தமனி தடிப்பால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகளாக பக்கவாதமும், மாரடைப்பும் இருக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதய நோய் இல்லாத 20 முதல் 99 வயதில் உள்ள 3,874 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் சராசரியாக 56 வயதை உடையவர்களாக இருப்பதாகவும், அதில் 43 சதவிகிதம் பெண்களே இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சிகரெட் பிடிக்காதவர்களை காட்டிலும் ஸ்மோக்கர்களின் இதயம் தடிமனாகவும், பலவீனமானதாகவும் இருக்கின்றனவாம். இதுபோக, தற்போது புகைப்பிடிப்பவர்களையும், ஓராண்டாக புகைப்பிடித்தவர்களின் இதயத்தின் செயல்பாடை ஒப்பிட்டு பார்த்ததில் அவர்களின் இடது பக்க இதய அறை மோசமானதாக இருப்பது தெரிய வந்துள்ளதாக ஆய்வு ஆசிரியர் ஹோல்ட் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் இதயத்தின் முக்கியமான பகுதியாக இடது பக்க அறை கருதப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும் 10 ஆண்டுகளில் இடைவிடாது புகைப்பிடிக்கும் ஒருவரின் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் திடீரென புகைப்பிடிப்பதை விட்டோர் அல்லது புகைப்பிடிக்காதவர்களின் இதயத்திற்கு செல்வதை விட குறைவாகவே செல்லும்.

ஆகவே புகைப்பிடிப்பது ரத்த நாளங்களோடு சேதப்படுத்துவதோடு இதயத்தையும் சேர்த்துதான் நேரடியாக தாக்குகிறது என்பது புலப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த நற்செய்தி என்னவென்றால் புகைப்பிடிப்பதை கைவிட்டால் இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பொது நலன்: Smoking is Injuries To Health என படம் பார்க்கும் போது மட்டும் கடந்துவிடாமல் புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கும், அந்த நபரை சார்ந்தவருக்கும் நேரும் ஆபத்துகளை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டொழித்தால் நலம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com