HMPV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். இதில், சுவாச நோய் தொற்றுகள், ஃப்ளு வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட கேட்டுக் கொண்டுள்ளார். ஹெச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இது ஏற்கெனவே 2001ஆம் ஆண்டு முதல் மக்களிடத்தில் பரவலாக இருக்கும் தொற்று எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் சோப்பு போட்டு கை கழுவுதல், அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல், அறிகுறி இருந்தால் மருத்துவர்களை உடனடியாக அணுகுதல் போன்ற நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.