இளம்பெண்களுக்கு ஹார்மோன் பாதிப்பு.. 20 வயதிலேயே கருவுறுதலில் சிக்கல்.. தீர்வு என்ன?
இளம்பெண்களிடையே ஹார்மோன் சமமின்மை மற்றும் கருவுறுதல் சார்ந்த சிக்கல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறிய வயதிலேயே அதிகரித்துவருவது மருத்துவ உலகில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 30களின் இறுதியில் காணப்பட்ட இத்தகைய பாதிப்புகள், தற்போது 20களிலேயே அதிகளவில் கண்டறியப்படுவதாக எய்ம்ஸ் மற்றும் சீதாராம் பாரதியா நிறுவன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறுவயதிலேயே பூப்படைதல், அதன் விளைவாகக் கருமுட்டை இருப்பு விரைவாகக் குறைதல் போன்றவை இதற்கு முக்கிய உயிரியல் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இருப்பினும், முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை, உடல் உழைப்பு இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற நவீன வாழ்வியல் மாற்றங்களே இந்தப் பாதிப்புகளுக்கு முதன்மைக் காரணிகளாக உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. எனினும், முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை மூலம் இந்த நிலையை மாற்றியமைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

