சரும நீரேற்றம் அவசியமா? உங்களுக்குத் தேவை இந்த உணவுகள்!

சரும நீரேற்றம் அவசியமா? உங்களுக்குத் தேவை இந்த உணவுகள்!
சரும நீரேற்றம் அவசியமா? உங்களுக்குத் தேவை இந்த உணவுகள்!

சருமத்திற்கு நீர்ச்சத்து ஏன் அவசியம் என்பதை சிந்தித்திருக்கிறீர்களா? ஏனென்றால் நீர்ச்சத்து மிகுந்த சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். தினசரி போதுமான நீர் அருந்தாவிட்டால் சருமம் வறண்டு, செதிலடைந்து எரிச்சல் ஏற்படும். மேலும் போதுமான நீரின்மை சரும சுருக்கத்தையும், வயதான தோற்றத்தையும் எளிதில் உருவாக்கிவிடும். இதற்கு நிறையப்பேர் இயற்கை தீர்வான தண்ணீரை போதுமான அளவிற்கு அருந்தாமல் மாய்ஸரைசர் மற்றும் க்ரீம் என தேடிச்செல்வர். என்னதான் வெளிப்புறத்தில் க்ரீம்களை தடவினாலும் முறையான உணவு மற்றும் தண்ணீர் அருந்தாவிட்டால் சருமத்திற்கு போதுமான ஆரோக்கியமும் நீர்ச்சத்தும் கிடைக்காது என்பதை மறக்கவேண்டாம். இந்த கோடைகாலத்தில் போதுமான தண்ணீருடன் சில பழங்களையும் எடுத்துக்கொள்வது சருமத்தை பளபளப்புடனும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.

வெள்ளரி

கோடைகாலத்தில் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. பச்சையாகவோ அல்லது சாலட் செய்தோ வெள்ளரிக்காயை தினசரி எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காயில் 95 சதவீதத்திற்கும் அதிமாக நீர்ச்சத்து இருப்பதால் உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும். குறிப்பாக சருமத்திற்கு போதுமான நீரேற்றத்தை கொடுக்கிறது.

தர்பூசணி

கோடைகாலத்தில் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடிய மற்றொரு பழம் தர்பூசணி. இந்த பழத்திலும் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கனிமங்களும், லைகோபேன், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற பைதோகெமிக்கல்களும் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அன்னாசி

அன்னாசி பழத்தில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இந்த பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இருக்கிறது. இது அழற்சி மற்றும் சரும வீக்கங்களை தடுக்கிறது.

தக்காளி

வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்களில் ஒன்று தக்காளி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. சருமத்திற்கு ஏற்ற உணவுப்பொருள் இது. தக்காளியில் லைகோபேன் என்ற கரோட்டினாய்டு இருப்பதால் இது சருமத்தை சூரிய கதிர்களால் சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும் சரும கொலாஜனை இருமடங்கு அதிகரிக்கிறது. சருமத்தை பாதுகாக்கும் உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறவர்கள் தக்காளியை எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளி

அதிக நீர்ச்சத்தும் குறைந்த சோடியமும் கொண்ட உணவு பப்பாளி. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, ஃபோலேட், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது வறண்ட மற்றும் உடைந்த சருமத்தை சரிசெய்து நீரேற்றத்துடன் வைக்கிறது. அடிக்கடி பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com