இந்தியாவிலும் HMPV... பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு உறுதியானது தொற்று!
சீனாவில் அதிக அளவில் பரவி வரும் HMPV வைரஸ், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுவதாக கடந்த சில தினங்களாகவே வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதல் நபர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைதான் அந்த முதல் நபர்.
எந்தவிதமான வெளிநாட்டு பயண வரலாறும் இல்லாத சூழ்நிலையிலும் அக்குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம். கொரோனா போலவே மூச்சுக்குழாயை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் இது. தற்போது சீனாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகமாக தாக்குகிறது. அதே நேரத்தில் இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறியிருக்கின்றனர்.
அதே போல “HMPV வைரஸ் என்பது அசாதாரண வைரஸ் கிடையாது. இந்தியாவிலும் ஏற்கெனவே உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று Joint Monitoring Group (JMG) மீட்டிங் முடிவில் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் HMPV வைரஸ் முதல் கேஸ் பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்துதான் மேற்கொண்டு எப்படி பாதிப்பு இருக்குமென உறுதிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.