கண்ணில் தொற்று எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?
பெரும்பாலனவர்களுக்கு கண்களில் கட்டி ஏற்படும். வெயிற்காலங்களில் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய ஒருவித கண் பிரச்னை உண்டாகும். மழைகாலங்களில் கண்ணுக்கு உள்ளே மற்றும் வெளியே என கட்டிகள் உருவாகும். கண்களில் பாக்டீரியா தொற்றுகளால் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன.
கண்ணுக்குள்ளே வரக்கூடிய கட்டிகளை இன்டர்னெல் ஹார்டியோலம் (Internal Hordeolum) கண் இமைக்கு மேலே கண்ணை ஒட்டி வெளியே வரக்கூடிய கட்டிகளை Stye என்றும் சொல்லுவோம்.
Internal Hordeolum
சிலருக்கு கண்ணுக்கு உள்ளே அதாவது கண் மடல்களின் உள்ளே சிறிய கட்டிகள் உருவாகும். வெளியே வரும் கட்டிகளைப்போல் எளிதாக இருக்காது. சில நேரங்களில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கண்ணுக்கு உள்ளே இருப்பதால் வலி, உறுத்தல், அரிப்பு, எரிச்சல் போன்ற அனைத்தும் இருக்கும். சிலருக்கு 7-10 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது.
அறிகுறிகள்
- கண் மடலில் ஒருவித வலி உண்டாகும்.
- பிறகு சிவப்பு அல்லது வெள்ளை நிற கட்டி கண் மடலை ஒட்டி உள்ளே உருவாகும்.
- கண் இமை மடல்களில் வீக்கம்
- சிலருக்கு கண் முழுவதும் வீக்கம்
- ஒருவகையான நீர்வடிதல்
- புண் அல்லது அரிப்பு
- தொடர்ந்து கண்ணீர் வருதல்
- கண் உறுத்தல்
- மங்கலான பார்வை
தொற்று எதனால் ஏற்படுகிறது?
கண்ணிமை உள்ளே இருக்கும் எண்ணெய் சுரப்பியில் ஒருவித பாக்டீரியாத் தொற்று காரணமாக கண்ணுக்குள் கட்டிகள் உருவாகலாம். கண்ணுக்கு வெளியே காற்றில் பரவும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் கண் இமைகள் மற்றும் முடிகளில் சேருவதால் வெளிப்புற கட்டிகள் உருவாகின்றன.
உடலில் வேறு எங்காவது பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டால் அதன்மூலம் கண்ணில் பரவலாம். பொதுவாக மூக்கில் ஏற்படும் சைனஸ் போன்ற தொற்றுகள் கண்ணிலும் பரவி உள்ளே, வெளியே தொற்றுக் கட்டிகளை உருவாக்குகிறன.
நாம் பயன்படுத்தும் கான்டாக்ட் லென்ஸ் அல்லது செயற்கை கண் முடிகள் மற்றும் மேக்அப் பொருட்களிலிருந்து கூட தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
பாதிப்புகள்
வெளிநபரிடமிருந்து இந்த பாக்டீரியா தொற்று பரவாது. வெளியே இருக்கும் பாக்டீரியாவை கைகளால் தேய்ப்பது மற்றும் கண்களை கசக்குவதன்மூலம் கண்ணுக்குள் நாமே செலுத்திவிடுவோம்.
வெளியே வரும் கட்டிகளைவிட உள்ளே வரும் கட்டிகள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியது. அவை நீண்டகாலம் இருக்கும். சில கட்டிகள் நீண்டநாள் கழித்து குணமாகும். ஆனால் திரும்ப வந்துவிடும். இதனால் இமையின் உட்புறத்தில் நீர்க்கட்டிகள் உடைந்து நீர் வெளியேறும்.
அதிகம் மூக்கு, தொண்டை மற்றும் சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு கண்ணில் தொற்றுகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சைகள்
- கைகளை சுத்தமாக கழுவியபின் இரண்டு விரல்களால் கண்ணிமைகளை மெதுவாக மசாஜ் செய்யவும். இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். உள்ளிருக்கும் கட்டிகளைத் தொட்ட பிறகு கண்டிப்பாக கைகளைக் கழுவவும்.
- எந்த காரணம் கொண்டும் கண்ணை கசக்கவோ அடிக்கடி தொடவோ கூடாது. இதனால் நிலைமை மோசமாகலாம் அல்லது மேலும் பரவலாம்.
- மருத்துவர் அறிவுரைப்படி ஆன்டிபயாட்டிக் களிம்புகள் மற்றும் சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம்.
- எரித்ரோமைசின் களிம்பு, டிக்ளோக்சசிலின் மாத்திரைகள், நியோமைசின், கிராமிசிடின் போன்ற மருந்துகளை மோசமான நிலையில் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
ஸ்டை - வெளிப்புறக் கட்டி
கண்ணுக்கு மேலே கண்ணிமைகளில் வரும் கட்டிகள் இவை. ஸ்டெபிலோகாகஸ் பாக்டீரியாவால் இவ்வகைக் கட்டிகள் ஏற்படுகிறது. மீபோமியன் சுரப்பி செயலிழப்பால் மூக்கு மற்றும் கன்னங்களில் முகப்பருக்கள் ஏற்படும். இதுவும் பல நேரங்களில் கண்கட்டிகளுக்குக் காரணமாகிறது. அதிகப்படியான மேக்அப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு நன்றாக சுத்தம் செய்யாமல் விடும்போதும் இதுபோன்ற கட்டிகள் உருவாகின்றன.
கண்களில் மேல் மற்றும் கீழ் இமைகளில் வீக்கம், அரிப்பு, சிவந்துபோதல் போன்றவை முக்கிய அறிகுறிகள்.
சிகிச்சைகள்
- கண்களுக்குமேல் சூடான ஒத்தடம் கொடுக்கலாம். சுடுதண்ணீரில் சுத்தமான துணியைத் தோய்த்து 5லிருந்து 10 நிமிடம்வரை கண்களில் ஒற்றி எடுக்கலாம்.
- அதிக வீரியமில்லாத சோப்புகளைக் கொண்டு கண்களைக் கழுவலாம்.
- கண்களில் கட்டி உள்ள சமயங்களில் மேக்அப் போடுதல் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் வைத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
- ஆன்டிபயாட்டிக் களிம்புகளைப் பயன்படுத்தலாம்.
- கட்டிகளை உடைத்துவிடவோ, அழுத்தவோ கூடாது. முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகவும்.