எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு.. பெண்களுக்கு நீரிழிவு அபாயம்.. ஆய்வில் தகவல்!!
கருப்பை திசுக்கள் வெளிப்புறத்தில் வளரும் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு, 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 46 சதவீதம் அதிகம் என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1996 முதல் 2021 வரை சுமார் 30 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட கால ஆய்வில், இந்த பாதிப்பால் உடலில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி (Chronic inflammation) இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி, நீரிழிவு நோய்க்கு வழிவகுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாதவிடாய் நிறுத்தத்துக்கு முந்தைய பருவத்தில் உள்ள பெண்களுக்கும், உடல் பருமன் இல்லாத பெண்களுக்கும் இந்த அபாயம் அதிகமாக உள்ளது. இந்த நோய் வெறும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், பெண்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கக்கூடியது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. எனவே, எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு ஆரம்பத்திலேயே நீரிழிவு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

