100 கோடி மக்களை காலரா தாக்குமா?.. WHO விடுத்த எச்சரிக்கை.. மருத்துவர் கொடுக்கும் அட்வைஸ்!

”43 நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள், இதில் குறிப்பாக குழந்தைகள், காலரா ஆபத்தில் உள்ளனர் ”என்று ஐநா தனது புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
நோயாளி
நோயாளிPT

43 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள், அதிலும் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலரா ஆபத்தில் உள்ளனர் என எச்சரித்துள்ளது சமீபத்திய ஐ.நா அறிக்கை.

“உலகளவில் காலரா உறுதியாவோரின் எண்ணிக்கையை மொத்தமாக பார்க்கையில், 10 வருடங்களுக்கு முன்பிருந்தததை விட நிலைமை மோசமாகிவிட்டது தெரிகிறது; காலராவின் இறப்பு விகித உயர்வும் பயமுறுத்துகிறது. நம் கண் முன்னேயே வறுமையிலுள்ள மக்களை இந்த பெருந்தொற்று (காலரா) கொன்றுக்கொண்டு இருக்கிறது

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவந்தாலும்கூட, காலராவுக்கான முதன்மை தடுப்பு சுத்தமான தண்ணீர் உபயோகம்தான்; இனி அனைத்து நாடுகளும் அதில் கவனம் செலுத்தி பணம் செலவிட வேண்டும்” என்றும் WHO, UN நிபுணர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காலரா என்ற பாக்டீரியா குறைந்திருந்த நிலையில், இன்று உலகையே அச்சுறுத்தும் விதமாக கணிசமாக அதிகரித்து வருவது கவலையை அளித்துள்ளது. இதில், குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய பாக்டீரியாவானது இந்தியாவில் மட்டும் அல்லாது உலகில் பல நாடுகளிலும், பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு, முன்பை விட மிக அதிகமாக பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் (WHO) கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து ப்ரதீப் நர்ஸிங்ஹோம் இயக்குனர் ( குழந்தைகள் நல மருத்துவர், மற்றும் பொது மருத்துவர்) டாக்டர்.ப்ரதீப்ராஜ் M.D. (Paed) Hon. Ph.D ( Reg. No.79610) அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில்..

Dr.pradeep
Dr.pradeep PT

”சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) காலரா நோயானது பலநாடுகளில் அதிகரித்து வருவதாகவும், இதனால், உலகளவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவானது முன்பை விட மோசமாக உள்ளதாகக் கூறியிருக்கிறது. இது நமக்குச் சொல்லப்பட்ட எச்சரிக்கை செய்தியாகும்.

எனவே இந்நோயின் தீவிரம் மற்றும் அதை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

காலரா உடலில் எந்த பாகத்தை தாக்குகிறது என்பதை பார்க்கலாம்.

காலரா என்பது விப்ரியோ காலரா என்ற பாக்டீரிவால் சிறு குடலின் தொற்று காரணமாக ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றால் ஏற்படலாம். இச்சமயங்களில் உடலில் இருக்கும் நீர் சத்தானது குறையக்கூடும். இதனால் நோயின் வீரியமானது அதிகரிக்கிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் முக்கியமாக குழந்தைகளையும் முதியவர்களையும் அதிகமாக குறிவைத்து தாக்குகிறது.

காலரா நோய்த்தொற்றானது பெரும்பாலும் லேசான அறிகுறியுடன் இருக்கலாம் அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம், ஆனால் ஒரு சிலருக்கு இந்நோய் தாக்கத்தின் அறிகுறியானது மிகவும் கடுமையானதாகவும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

காலரா எப்படி பரவுகிறது?

இத்தகைய நோயானது சுகாதாரமற்ற உணவு, சுகாதாரமற்ற தண்ணீர், தெரு ஓரங்களில் சுகாதாரமற்ற உணவுகள், சுத்தமற்ற குடிநீர், நன்கு கழுவாத பச்சை காய்கறிகள், பழங்களை உண்ணுதல், கைகளை சுத்தமாக கழுவாத போது, சுகாதாரமற்ற கழிப்பறைகள் இதனால் தொற்றுக்கள் உருவாகலாம். இந்நோய் தாக்கத்தால் உடலில் அதிகப்படியான நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது. சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட வழிவகை செய்கிறது. இத்தகைய நோயை மலப்பரிசோதனை மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

நோய் தாக்கத்தின் அறிகுறிகள்

காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி, உடல் சோர்வு, தோல் வறட்சி, தாகம், சிறுநீர் கழித்தலில் பிரச்சனை, போன்றவை இதற்கான அறிகுறிகள்.

இத்தகைய அறிகுறிகள் கண்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மூலம் கண்டறிந்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதற்கான சிகிச்சை

பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய இந்நோயை தவிர்க்க.. இந்நோய் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும், இழந்த எலக்ட்ரோலைட்டுகள், திரவங்கள் மீண்டும் உடலில் சேர ரீஹைட்ரேஷன் ORS அல்லது சக்கரை, உப்பு கலந்த தண்ணீர் பருகவேண்டும். இதை குணப்படுத்த மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலராவுக்கான தடுப்பூசிகள் இருந்தாலும் கூட தேவைக்கு குறைவானதாகவே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே.. இந்நோய் வருவதற்கு முன்பாக... இந்நோய் வராமலிருக்க , கொதிக்கவைத்த குடிநீர், நன்கு சமைக்கப்பட்ட மற்றும் சூடான உணவு, மூடிவைக்கப்பட்ட உணவுகள், இவற்றை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்க வேண்டும்" என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com